மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

சிறப்புக் கட்டுரை: உங்கள் பட்ஜெட்டில் 'நேர்மை' இருக்குமா?

சிறப்புக் கட்டுரை: உங்கள் பட்ஜெட்டில் 'நேர்மை' இருக்குமா?

நா. ரகுநாத்

2020-21 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை, அதாவது பட்ஜெட், பிப்ரவரி 1 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. பெரிதும் வேகமிழந்த நிலையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு இந்த நிதிநிலை அறிக்கையில் ஒன்றிய அரசு என்னென்ன செய்ய வேண்டும் என்பது ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

பட்ஜெட்டும் பொருளாதார சூழலும்

இந்தியப் பொருளாதாரம் 2019-20 நிதியாண்டில் 5 விழுக்காடு வேகத்தில்தான் வளரும் என்று ரிசர்வ் வங்கி மற்றும் தேசியப் புள்ளியியல் அலுவலகம் (NSO) அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளன. கடந்த பதினோரு ஆண்டுகளில் இதுவே மிகக்குறைவான வளர்ச்சியாக இருக்கும் என்று தெரிகிறது. பொருளாதாரம் வேகமாக வளரும்போதே போதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதில்லை, அந்த வளர்ச்சியின் பலன்கள் அனைவரையும் சென்று சேர்வதில்லை. அந்த வளர்ச்சியின் வேகம் குறையும்போது அது பொருளாதாரப் படிநிலையில் அடித்தட்டுகளில் இருக்கும் மக்களின் வாழ்வில் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை நாம் புரிந்துகொள்வது அவசியம். நாட்டில் அதிகரிக்கும் வேலையின்மை, மக்களிடையே நுகர்வுச் சரிவு, பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் சுணக்கம் பற்றி மின்னம்பலம் இணையப் பத்திரிக்கையில்

இந்தியப் பொருளாதாரமும் வேலைவாய்ப்பும்

வறுமையை மூடி மறைக்கும் மோடி அரசு

தீவிர சிகிச்சைப் பிரிவில் இந்தியப் பொருளாதாரம்!

ஆகிய கட்டுரைகள் மூலமாக நாம் தொடர்ந்து எழுதி வந்துள்ளோம்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் வெளிவந்த செய்தி ஒன்று மேலும் ஒரு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் அன்றாடம் நுகரும் பொருட்களின் விலை 2019 டிசம்பர் மாதம் 7.35 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று விலைவாசி உயர்வை அளவிடும் நுகர்வோர் விலைக் குறியீடு (Consumer Price Index) தெரிவிக்கிறது. ஐந்தரை ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக விலைவாசி உயர்வு இந்த நிலையைத் தொட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உணவுப் பொருட்களின் விலை, அதிலும் குறிப்பாக காய்கறிகளின் விலை, கிடுகிடுவென உயர்ந்துள்ளதன் விளைவாகவே விலைவாசி இந்த அளவிற்கு உயர்ந்துள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. நவம்பர் மாதம் 36 விழுக்காடு அதிகரித்த காய்கறிகளின் விலை, டிசம்பர் மாதம் 60 விழுக்காடு அதிகரித்துள்ளது. இந்த 7.35 விழுக்காடு என்பது, ரிசர்வ் வங்கி விலைவாசி உயர்வுக்கு நிர்ணயித்துள்ள உச்சவரம்பான 6 விழுக்காட்டைவிட அதிகம் என்பதால் இந்த செய்தி கவலையளிக்கிறது.

வேகமிழக்கும் பொருளாதாரம், அதிகரிக்கும் வேலையின்மை மற்றும் தொடர்ந்து அதிகரிக்கும் அத்தியாவசியப் பொருட்களின் விலை, “stagflation” எனும் நிலைக்கு இந்தியப் பொருளாதாரத்தைத் தள்ளிவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. Stagflation என்பது, உற்பத்தியில் தேக்கமும் விலைவாசி உயர்வும் சேர்ந்து இயங்கும் ஒரு நிலை. ஏற்கனவே பல முறை வட்டி விகிதத்தைக் குறைத்தும் எந்த பயனும் ஏற்படாத நிலையில், உச்சவரம்பைத் தாண்டி விலைவாசி உயரும்போது ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் கூட்டுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆக, ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை (monetary policy) பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க பெரிதாக உதவப்போவதில்லை என்று பொருளாதார நிபுணர்கள் உணர்வதால், அந்த பொறுப்பை முழுவதுமாக அரசின் நிதிக் கொள்கை (fiscal policy) சுமக்க வேண்டும் என்பது நிதர்சனமாகத் தெரிகிறது. அதனால்தான் அனைவரின் கவனமும் நிதிநிலை அறிக்கையின் பக்கம் திரும்பியுள்ளது.

கடந்த பட்ஜெட் எப்படி இருந்தது?

2020-21 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை எப்படிப்பட்ட நிதிநிலை அறிக்கையாக இருக்க வேண்டும்? நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்போகும் இந்த நிதிநிலை அறிக்கை ’நேர்மையான’ ஒன்றாக இருக்க வேண்டும். பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று இரண்டாவது முறையாக ஆட்சியில் அமர்ந்த மோடி அரசின் முதல் முழுமையான நிதிநிலை அறிக்கை 2019 ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்டது. நிதிநிலை அறிக்கை என்பது வரப்போகும் நிதியாண்டில் எவ்வளவு வருவாய் எதிர்பார்க்கப்படுகிறது, எவ்வளவு செலவுகள் மேற்கொள்ளப்படும் என்பதை நாட்டு மக்களுக்கு சொல்லும் ஒரு அறிக்கை. அந்த அறிக்கை ஆயிரக்கணக்கான பக்கங்களைக் கொண்டதாக இருக்கும். அவற்றையெல்லாம் படித்து நுணுக்கங்களைத் தெரிந்துகொள்ள மக்களுக்கு நேரம் கிடையாது. அதனால், நிதியமைச்சர் தன்னுடைய உரையில் அந்த விவரங்களைக் கொடுப்பது வழக்கம். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் உரையில் வரவு-செலவு கணக்கு பற்றிய தகவல்கள் இல்லவே இல்லை!

சரி, நிதிநிலை அறிக்கையையே படித்துத் தெரிந்துகொள்வோம் என்று கிளம்பியவர்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. என்ன அதிர்ச்சி? வரப்போகும் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் சென்ற நிதியாண்டில் அரசு எவ்வளவு வருவாய் ஈட்ட முடிந்தது, எவ்வளவு செலவு மேற்கொண்டது பற்றிய தரவுகள் வழங்கப்படும். பொதுவாக, பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதால், முதல் மூன்று காலாண்டுகளில் பொருளாதாரத்தின் செயல்பாட்டின் அடிப்படையில் அடுத்த காலாண்டுக்கான மதிப்பீடுகள் செய்யப்பட்டு, நிதிநிலை அறிக்கையில் எதிர்பார்க்கப்பட்ட வருவாய் வர வாய்ப்பிருக்கிறதா இல்லையா என்று திருத்தப்பட்ட மதிப்பீடுகள் (Revised Estimates) வழங்கப்படும். அதேபோல் செலவுகளுக்கும் திருத்தப்பட்ட மதிப்பீடுகள் வழங்கப்படும்.

இவை அடுத்த நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும். சென்ற நிதியாண்டைவிட இந்த நிதியாண்டில் வருவாய் மற்றும் செலவு எந்த அளவிற்கு அதிகரிக்கும் என்று அரசு எதிர்பார்க்கிறது என்பதை அது மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதே அதற்குக்காரணம். 2018-19 நிதியாண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகள் 2019-20 நிதிநிலை அறிக்கையில் இருந்தன. அவற்றின் அடிப்படையில் 2019-20க்கான வருவாய் மற்றும் செலவு கணிக்கப்பட்டிருந்தது.

மறைக்கப்பட்ட உண்மை

இதில் அதிர்ச்சியடைய ஒன்றும் இல்லையே என்பதுபோல் தோன்றும். ஆனால், உண்மை வேறொரு இடத்தில புதைந்து கிடந்தது. 2019 ஜூலை மாதத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ததால், 2018-19க்கான முழுமையான வரவு-செலவு பற்றிய தரவுகள் அரசிடம் இருந்தது. இதனை Provisional Actuals என்பார்கள். இதுதான் வரவு-செலவு பற்றிய உண்மையான சேதியைச் சொல்லும். 2018-19க்கான Provisional Actuals அந்த நிதியாண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையின் ஏதோவொரு மூலையில் கிடந்தது. அதில் தெரியவந்தது என்ன தெரியுமா? 2018-19 இல் உண்மையில் அரசுக்கு கிடைத்த வருவாய், திருத்தப்பட்ட வருவாய் மதிப்பீடுகளைவிட 13.5 விழுக்காடு (ரூ. 1.65 லட்சம் கோடி) குறைவு. அரசு செய்த செலவு, திருத்தப்பட்ட செலவு மதிப்பீடுகளைவிட 13.5 விழுக்காடு (ரூ. 1.45 லட்சம் கோடி) குறைவு.

அதாவது, மக்களிடம் சொன்னதைவிட அரசுக்கு கிடைத்த வருவாய், அரசு மக்களுக்காக செய்த செலவு இரண்டும் கணிசமான அளவிற்கு சுருங்கியது என்பதே உண்மை. நிதிப்பற்றாக்குறையை (Fiscal Deficit) கட்டுக்குள் வைக்க வேண்டும் என்பதால், எதிர்பார்க்கப்பட்ட வருவாய் வராத நிலையில், அரசு செலவுகளைக் குறைத்திருக்கிறது. எந்தெந்த செலவினங்களை அரசு வெட்டியது என்பது குறித்த விவரங்கள் பொது வெளியில் இல்லை.

ஒன்றிய அரசு மக்களுக்காக செய்யும் செலவு, 2013-14 நிதியாண்டில் நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் (GDP) 13.9 விழுக்காடாக இருந்தது. அது தொடர்ந்து சரிந்துகொண்டே வந்து 2018-19 நிதியாண்டில் வெறும் 12.2 விழுக்காடாக இருந்தது. அந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யும்போது அரசு செய்யப்போகும் செலவு மொத்த உற்பத்தி மதிப்பில் 13 விழுக்காடாக இருக்கும் என்று சொல்லப்பட்டது. சொன்னதைவிட 0.8 விழுக்காட்டுப் புள்ளிகள் குறைவு.

எதிர்பார்த்த வருவாய் வராததே அரசு செலவினங்களைக் குறைததற்குக் காரணம் என்றால், வருவாய் ஏன் குறைந்தது என்ற கேள்வி எழுகிறது. அதற்கான பதில்: சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி (GST). 2017-18, 2018-19 என தொடர்ந்து இரண்டு நிதியாண்டுகளிலும் ஜிஎஸ்டி வரிவருவாய் அரசு எதிர்பார்த்ததைவிடக் குறைவாகவே இருந்தது. இதில் மற்றொரு தகவலும் நம்முடைய கவனத்தைப் பெற வேண்டும். ஜூலை 1, 2017 அன்று ஜிஎஸ்டி அமலுக்கு வந்தது. அது மறைமுக வரிகளை வசூலிப்பதற்கு கொண்டுவரப்பட்ட ஒரு புதிய முறை. 2017-18, 2018-19 நிதியாண்டுகளில் பெறப்பட்ட ஜிஎஸ்டி வரிவருவாய், 2016-17 இல் பழைய வரி வசூலிக்கும் முறையில் பெறப்பட்ட மறைமுக வரிவருவாயைவிடக் குறைவு. பொருளாதாரம் வேகமிழந்ததால் பொருட்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தி குறைந்து மறைமுக வரிவருவாய் குறைந்ததா, இல்லை, இந்த புதிய வரி செலுத்தும்/வசூலிக்கும் முறையில் உள்ள சிக்கல்களால் உற்பத்தி, சிறுதொழில்கள் பாதிக்கப்பட்டு பொருளாதாரம் வேகமிழந்ததா எனும் கேள்வி எழாமல் இல்லை.

ஒரு நிதியாண்டில் எவ்வளவு வருவாய் வந்தது, எவ்வளவு செலவு மேற்கொள்ளப்பட்டது; நிதியாண்டின் இறுதியில் வரவும் செலவும் நிதிநிலை அறிக்கையில் சொன்னதைவிட எவ்வளவு குறைவாக இருந்தது என்ற முழுமையான தரவுகள் அரசிடம் இருந்தபோதும் நிதிநிலை அறிக்கையில் அது இடம்பெறவில்லை. ஏன் என்று கேட்டால் நேர்மையான பதில் கிடைக்கவா போகிறது?

உண்மையான நிதிநிலை என்னவென்றே தெரியாத அவலநிலை!

வரப்போகும் நிதியாண்டில் வரவுக்கும் செலவுக்கும் எவ்வளவு இடைவெளி இருக்கும், அதை சரிசெய்ய அரசு எவ்வளவு கடன் வாங்க வேண்டும் என்பதே அந்த நிதியாண்டுக்கான நிதிப்பற்றாக்குறை. அதன் அளவு நிதிநிலை அறிக்கையில் சொல்லப்படும். நிதிப்பற்றாக்குறை நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 3 விழுக்காட்டைத் தாண்டக்கூடாது என்று 2003-04இல் சட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டது. எதன் அடிப்படையில் 3 விழுக்காடு எனும் உச்சவரம்பை முடிவு செய்தார்கள் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. ஆனால், ஒருமுறைகூட நிதிப்பற்றாக்குறை 3 விழுக்காட்டுக்குக் கீழ் இருந்ததே இல்லை. படிப்படியாக அதைக்குறைத்து 2020-21இல் 3 விழுக்காட்டை அடைந்துவிட வேண்டும் என்றெல்லாம் சொன்னார்கள்.

அதை ஒட்டியே கடந்த சில ஆண்டுகளாக நிதிப்பற்றாக்குறையை 3.5 விழுக்காட்டுக்கு குறைவாக வைத்து வந்துள்ளது ஒன்றிய அரசு. ஆனால், உண்மையில் நிதிப்பற்றாக்குறை அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவிப்பதைவிட 2 விழுக்காட்டுப் புள்ளிகள் அதிகமாக இருக்கக்கூடும் என்று தலைமைக் கணக்கு தணிக்கையாளர் அலுவலகத்தின் (Office of the Comptroller and Auditor General – CAG) அறிக்கைகள் நமக்குத் தெரிவிக்கின்றன.

பொதுத்துறை நிறுவனங்களுக்கு தரவேண்டிய தொகையைத் தராமல், அந்நிறுவனங்களை சந்தையில் கடன் வாங்கிக்கொள்ளுமாறு அரசு கூறியிருக்கிறது. அவை வாங்கும் அந்த கடனைத் திருப்பிச் செலுத்துவது அரசாங்கத்தின் பொறுப்புதான் என்றாலும், அது அரசின் நிதிநிலை அறிக்கையில் வராது. ஆக, எவ்வளவு கடன் வாங்கியுள்ளது என்பதிலும் வெளிப்படைத்தன்மை இல்லை. கூடுதலாக கடன் வாங்குவதில் தவறில்லை; அதில் வெளிப்படைத்தன்மை இல்லாததும், மொத்த உள்நாட்டுக் கடன் எவ்வளவு என்று பொதுவெளியில் வைக்கும் தகவல்களில் நேர்மை இல்லாததும்தான் கவலையளிக்கிறது.

நேர்மையற்ற பொருளாதார மேலாண்மையும் குறைந்தபட்ச எதிர்பார்ப்பும்!

கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2017-18இல் நாட்டில் வேலையின்மை 6.1 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்று தெரிவித்த தேசிய மாதிரி ஆய்வு அமைப்பின் (NSSO) “Periodic Labour Force Survey 2017-18” எனும் அறிக்கை, 2018ஆம் ஆண்டின் இறுதியில் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. மோடி அரசு இந்த அறிக்கையை வெளியிடாமலேயே வைத்திருந்தது.

ஜூலை 2017 - ஜூன் 2018 காலத்தில் நுகர்வோர் செலவீட்டு ஆய்வை (consumer expenditure survey) NSSO நடத்தியது. இந்தியாவில் ஒரு தனிநபர், நுகர்வுக்காக ஒரு மாதத்தில் செய்யும் செலவு (monthly per capita expenditure) 2011-12 - 2017-18 காலத்தில் 3.7 விழுக்காடு சரிந்துள்ளது; நகர்ப்புறங்களில் வெறும் 2 விழுக்காடு மட்டுமே வளர்ந்த இந்த நுகர்வுச் செலவு, ஊரகப் பகுதிகளில் 8.8 விழுக்காடு சரிந்துள்ளது என்பது தெரியவந்தது.

2019 மே மாதம் தேசியப் புள்ளியியல் ஆணையம் (National Statistical Commission) இந்த அறிக்கையை வெளியிடலாம் என்று கையொப்பம் இட்டு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் வழங்கிய பின்பும், ஆய்வின் முடிவுகள் அரசுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்ததால், ஐந்து மாதங்களாக இந்த அறிக்கையை வெளியிடாமலேயே இருந்தது மோடி அரசு.

ஜிடிபி எனப்படும் நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பின் வளர்ச்சியைக் கணக்கிடும் முறையில் மாற்றங்கள் கொண்டுவந்து, பணமதிப்பழிப்பு (demonetization) மேற்கொள்ளப்பட்ட 2016-17 நிதியாண்டிலும் 8.2 விழுக்காடு வேகத்தில் பொருளாதாரம் வளர்ந்தது என்று நம்பமுடியாத அளவிற்கு சந்தேகத்திற்குரிய புள்ளிவிவரங்களை அடுக்கினார்கள்.

சென்ற ஆண்டு ஜூன் மாதம், முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி பற்றி ஆய்வுக்கட்டுரை ஒன்று எழுதி வெளியிட்டது பல வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 2011-2017 காலத்தில் இந்தியப் பொருளாதார வளர்ச்சியின் வேகம், அரசின் அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதைவிட கிட்டத்தட்ட 2.5 விழுக்காட்டுப் புள்ளிகள் குறைவானதாக இருக்கக்கூடும் என்று அவர் கூறியதே அதற்குக்காரணம். அவர் சொல்வதில் உண்மை உள்ளது என்றால், 2011-2017 காலத்தில் இந்தியப் பொருளாதாரம் சராசரியாக ஆண்டுக்கு 7 விழுக்காடு வேகத்தில் வளரவில்லை; வெறும் 4.5 விழுக்காடு வேகத்தில் மட்டுமே வளர்ந்ததா என்ற கேள்வி எழுகிறது.

ஆக, பொருளாதாரம் தொடர்பான தரவுகளைப் பொறுத்தவரை மோடி அரசு வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்கவே இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இப்படிப்பட்ட அரசிடமிருந்து பெரிதாக எதுவும் எதிர்பார்க்க முடியாது என்றாலும்கூட, ஒரு ஜனநாயக நாடு இதுபோன்ற நேர்மையற்ற பொருளாதார மேலாண்மையைக் கேள்வி கேட்காமல் இருந்துவிடக்கூடாது. பொருளாதாரம் எந்த வேகத்தில் வளரும் என்று சரியாக மதிப்பீடு செய்தால்தான் வரிவருவாய் எந்த வேகத்தில் அதிகரிக்கும், அதை மக்கள் வாழ்வை மேம்படுத்த எப்படி செலவு செய்யல்லாம் என்று திட்டமிட முடியும். எப்போதும் தேசியத்தை மட்டுமே பேசுபவர்கள், தேசத்தின் நலனைக் கருத்தில் கொண்டு இம்முறையாவது நேர்மையான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்வார்கள் என நம்புவோம்.

கட்டுரையாளர் குறிப்பு:

நா.ரகுநாத், பொருளியல் முதுகலைப் பட்டதாரி. இந்தியாவின் அரசியல் பொருளாதாரம் பற்றி ஆய்வு செய்வதிலும் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர். தற்போது, பட்டயக் கணக்காளர் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்குப் பொருளியல் பாடங்களில் பயற்சி அளித்து வருகிறார்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

வெள்ளி, 17 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon