மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 15 ஜூலை 2020

சிறுபான்மையினரை திசை திருப்பவே சிஏஏ போராட்டம்: ஜெயக்குமார்

சிறுபான்மையினரை திசை திருப்பவே சிஏஏ போராட்டம்: ஜெயக்குமார்

சிஏஏ சட்டம் தொடர்பாக நடைபெற்று வரும் போராட்டங்கள் தேவையற்றவை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து பல கட்சிகள், பல இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் தினந்தோறும் போராட்டங்களும் ஆர்பாட்டங்களும் நடந்துகொண்டிருக்கின்றன. ஜனவரி 19 ஆம் தேதி வேலூரில் சிஏஏ எதிர்ப்பு மாநாட்டை மமக நடத்துகிறது.

இந்த நிலையில் இன்று எம்.ஜி.ஆரின் பிறந்த தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் எம்ஜிஆருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் பெரும்பாலான அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் அரசு சார்பில் மரியாதை செலுத்தினர்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை சட்டத்தால் சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பும் இல்லை. சிறுபான்மையினருக்கு எல்லா வித பாதுகாப்பையும் அம்மா அரசு வழங்கி வருகிறது.

இப்போது தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகளுக்கு அரசியல் செய்ய எதுவும் இல்லை. சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது. மக்கள் நலத் திட்டங்கள் முறையாக மக்களை சென்றடைகின்றன. எனவே அரசியல் செய்ய வேறு எதுவும் கிடைக்காத காரணத்தால் இதைக் கையிலெடுத்துக் கொண்டு சிறுபான்மையினரை திசை திருப்பும் வகையிலேயே குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் எதிர்கட்சியினர் அரசியல் செய்கிறார்கள். திமுக சிறுபான்மையினருக்கு நாங்கள்தான் பாதுகாப்பு என்று சொல்வது நடிப்பு. எங்களுக்கு திமுகவினர் போல நடிக்கத் தெரியாது” என்றார் அமைச்சர்.

வெள்ளி, 17 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon