மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

கிச்சன் கீர்த்தனா: வேர்க்கடலை ஒப்புட்டு

கிச்சன் கீர்த்தனா:  வேர்க்கடலை ஒப்புட்டு

தானியங்களை அதிகம் பயன்படுத்தி பலகாரங்கள் செய்வதில் கொங்கு மக்கள் சிறப்பானவர்கள். பொங்கல் திருவிழா நாளில் கூடும் சொந்த பந்தங்களுக்கு விதவிதமான பலகாரங்களைச் செய்து விருந்தளிப்பதில் இவர்களுக்கு ஆர்வம் அதிகம். குறிப்பாக, விதவிதமான ஒப்புட்டுகள் பொங்கல் விழாவைச் சிறக்கச் செய்யும். வடநாட்டு போளி போன்றே இவை இருந்தாலும் சுவையில் வேறுபட்டது. சத்தும் மணமும்கொண்ட ஒப்புட்டு, கொங்கு தேசத்தின் முக்கிய பலகாரம். காணும் பொங்கல் அன்று ஸ்வாமிக்கு இதைப் படையலிட்டு விருந்தினருக்கு விநியோகிக்கப்பார்கள்.

என்ன தேவை?

கோதுமை மாவு - 200 கிராம்

வேர்க்கடலை - 100 கிராம்

பொடித்த வெல்லம் - 200 கிராம்

எள் - ஒரு டேபிள்ஸ்பூன்

நெய் - 100 கிராம்

ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வேர்க்கடலையை நன்கு வறுத்து தோல் நீக்கி கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். எள்ளையும் மணம் வரும் வரை லேசாக வறுத்துப் பொடிக்கவும். வேர்க்கடலை, எள், ஏலக்காய்த்தூள், வெல்லம் சேர்த்துப் பிசைந்து பூரணக் கலவை செய்துகொள்ளவும். அகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவு, 2 ஸ்பூன் நெய், தேவையான அளவு உப்பு சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்து வைக்கவும். இந்த மாவின்மீது நெய் தடவி 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு மாவிலிருந்து பூரி அளவுக்கு மாவு எடுத்து நடுவில் குழி செய்து, அதில் 2 ஸ்பூன் பூரணக் கலவை வைத்து, மாவை இழுத்து மூடி உருட்டவும். அதை மெதுவாக சப்பாத்தி போல தேய்த்து, சூடான வாணலியில் சிறிதளவு நெய்விட்டு இரண்டு பக்கமும் வேகும்வரை சுட்டெடுக்கவும்.

வெள்ளி, 17 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon