மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 3 ஆக 2020

சிறப்புக் கட்டுரை: எடப்பாடி அரசின் எதேச்சதிகார வடிவங்கள்!

சிறப்புக் கட்டுரை: எடப்பாடி அரசின் எதேச்சதிகார வடிவங்கள்!

ராஜன் குறை

எடப்பாடி பழனிசாமி மக்கள் ஆதரவு பெற்ற தலைவர் என்பது நிறுவப்படவில்லை. அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியின் ஆதரவு தளம் இன்றைய நிலையில் நாடாளுமன்றத் தேர்தல், சில சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைக்கால தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றில் காப்பாற்றி வருகிறது. முதல்வரை மறைமுகமாகத் தேர்ந்தெடுக்கும் சட்டமன்றத் தேர்தல் என்பது நிகழும்போதுதான் இவரை ஒரு தலைவராக மக்கள் ஏற்கிறார்களா, எந்த அளவு ஏற்கிறார்கள் என்பது தெளிவாகும்.

ஜெயலலிதா கட்சி தலைவராக இருந்து 2016ஆம் ஆண்டு வெற்றிபெற்றார். அவர் நோய்வாய்பட்டு இறக்கும் தருவாயில் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சரானார். அவர் பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டில் இயங்கத் தொடங்கியதால் சசிகலா, அவரே முதலமைச்சராக முடிவு செய்தார். மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் உறங்கிக்கொண்டிருந்த சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை வெளியிடச் செய்து சசிகலாவின் முயற்சியில் மண்ணைப் போட்டது. ஆனாலும் ஓபிஎஸ்ஸின் தர்மயுத்தம் வெற்றிபெறாமல் கூவத்தூர் ரிசார்ட்டில் எம்.எல்.ஏ.க்களை சசிகலா, தினகரன் பதுக்கி வைத்திருந்தபோது சசிகலாவுக்கு தற்காலிக மாற்றாக தவழ்ந்து சென்று அவர் காலில் விழுந்து ஆட்சிப் பொறுப்பேற்ற பழனிசாமி, மோடியின் கட்டுப்பாட்டுக்குள் சென்று சசிகலாவுக்கே துரோகம் செய்தது தமிழகம் நன்கறிந்த வரலாறு.

இப்படி பதிவியேற்ற எடப்பாடியின் ஆட்சி காலம் என்பது தொடர்ந்து காவல் துறை அத்துமீறல்களும், எதேச்சதிகார செயல்பாடுகளும் நிறைந்ததாக விளங்குகிறது. மக்கள் ஆதரவைப் பெறாத ஒரு தலைவர் தொடர்ந்து மக்கள் உரிமைகளை துச்சமாக மதித்து நடப்பது பெரும் வியப்பிற்குரியது. இவர் ஒரு தலைவராக தன்னை உறுதிபடுத்திக்கொள்வது என்பது எதேச்சதிகார செயல்களால் முற்றிலும் சாத்தியமற்றுப் போய்விடும் என்பதைக் கூட அவருக்கு எடுத்துச்சொல்ல ஆட்கள் இல்லை. தேர்தலில் மக்கள் ஆதரவைப் பெற்ற தலைவர்கள் தவறு செய்தால் அந்த ஆதரவு குறையும். இன்னமும் மக்கள் மத்தியில் ஒரு தலைவராக தங்களை நிறுத்திக்கொள்ளாதவர் எதேச்சதிகார ஆட்சி செய்வது அவருடைய அரசியல் எதிர்காலத்தை நிர்மூலமாக்கிவிடும்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலை போராட்டத்தில் ஜாலியன் வாலாபாக் போன்ற கொடூரமான துப்பாக்கிச் சூட்டை காவல் துறை நிகழ்த்திய பிறகு தொலைக்காட்சியில் அதை பார்த்துத் தெரிந்துகொண்டதாக முதல்வர் பழனிசாமி கூறியது யாருடைய ஏவலாள் அவர் என்ற கேள்வியையே எழுப்பியது.

சென்னை புத்தகத் திருவிழா

ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் விடுமுறையினை உள்ளடக்கி பபாசி என்று சுருக்கமாக அழைக்கப்படும் Booksellers & Publishers of South India என்ற புத்தக வியாபாரிகள், பதிப்பாளர்கள் கூட்டமைப்பு ஒரு புத்தகக் காட்சியை அல்லது திருவிழாவை நடத்தி வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் கூடுதலாகப் பிரபலமடைந்துவரும் இந்த புத்தகத் திருவிழாவுக்கு ஏராளமான பொதுமக்கள் வருவதும், பத்து ரூபாய் நுழைவுக் கட்டணம் செலுத்தி அரங்கத்துள் சென்று புத்தகங்களைப் பார்வையிடுவதும் கலாச்சார ஆர்வலர்கள் மனம் பூரிக்கும் காட்சியாக இருந்து வருகிறது.

தமிழகத்தின் அனைத்து முக்கிய பதிப்பகங்களும் இங்கே அரங்குகள் அமைத்து தங்கள் வெளியீடுகளைக் காட்சிப்படுத்தி வருகின்றன. கலையுலகம் சார்ந்த பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் எல்லாம் இங்கே வருவதும் தாங்கள் வாங்கிய நூல்கள் குறித்து ஊடகங்களில் பகிர்வதும் தமிழகத்தின் முக்கிய நிகழ்வாக இந்தப் புத்தகத் திருவிழாவை மாற்றியமைத்துள்ளது. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த முத்தமிழ் அறிஞர், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நன்கொடையாக ஒரு கோடி ரூபாய் அளித்து ஐந்து எழுத்தாளர்களுக்கு ஆண்டுதோறும் பரிசுகளை வழங்கும்படி பபாசி அமைப்பினை கேட்டுக் கொண்டார்.

அனைத்து ஊடகங்களும், எழுத்தாளர்களும், சிந்தனையாளர்களும், கலைஞர்களும் பங்கேற்கும் இந்த விழா சீரிய கருத்துப் பரிமாற்றங்களுக்கும், கருத்தரங்குகளுக்கும், உரைகளுக்கும் இடமளிக்கும் ஜனநாயகப் பெருவிழாவாக இருந்து வருகிறது. அத்தகைய ஒரு நிகழ்வில் பெரும் களங்கமாக கண்காட்சியிலிருந்து ஒரு பதிப்பாளரின் அரங்கம் வெளியேற்றப்பட்டுள்ளதும், அந்த நடவடிக்கையினை ஏற்க மறுத்த அவர் கைது செய்யப்பட்டுள்ளதும் கருத்துரிமையில் நாட்டம் கொண்ட அனைவரையும் திகைப்படைய வைத்துள்ளது.

அரசுக்கும் அரசாங்கத்திற்கும் எதிரான நூல்

மக்கள் செய்தி மையம் என்ற அமைப்பு / வலைதளம் / பதிப்பகத்திற்கு அரங்கம் எண் 101 ஒதுக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. அன்பழகன் என்ற பத்திரிகையாளர் இதன் ஆசிரியர் /பொறுப்பாளர். இந்த அமைப்பு தமிழக அரசுத்துறைகளில் நிழந்த, நிகழும் ஊழல்களைக் குறித்து புலனாய்வு செய்திகளை, தகவல்களை வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது. அதன் வலைதளத்தில் “முட்டை” தொடர்பான ஊழல் குறித்த நூலைப் பற்றிய தகவல் காணப்படுகிறது. இந்த பத்திரிகையாளர் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளதாகவும் தகவல்கள் காணப்படுகின்றன.

பபாசி அமைப்பு ஜனவரி 11ஆம் தேதி, அதாவது புத்தகக் காட்சி தொடங்கிய இரண்டாம் நாள் ஒரு நோட்டீஸ் எனப்படும் தாக்கீதை அனுப்பியுள்ளது. அதில் “அரசுக்கும், அரசாங்கத்திற்கும் எதிராக நீங்கள் உங்கள் கடையில் சர்ச்சைக்குரிய புத்தகத்தை விற்பது விதிமீறல் ஆகும்” என்று குறிப்பிட்டுள்ளது. அதாவது பபாசி சங்கத்தின் விதிமீறல் என்ற பொருளில் எழுதப்பட்டுள்ளது. அதனால் தொடர்ந்து மக்கள் செய்தி மையம் காட்சியில் கலந்துகொள்வதை தடைசெய்வதாகவும், அது அரங்கத்தை அகற்றிவிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இதன்படியே அந்த கடை அகற்றப்பட்டதாகவும், அதற்கு மறுப்பு / எதிர்ப்பு தெரிவித்த அன்பழகன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

அரசு என்ற வார்த்தைக்கு ஆங்கிலத்தில் ஸ்டேட் என்ற பொருள். இது தமிழக அரசு என்பதைக் குறிப்பது. அரசு என்பது ஒட்டுமொத்த தமிழக மக்களின் அதிகாரத்தை குறிப்பது; அது அருவமானது. நடைமுறையில் அரசு நிர்வாக இயந்திரமாகவும் (அட்மினிஸ்டிரேஷன்), ஆட்சியிலிருக்கும் மக்கள் பிரதிநிதிகளால் ஆன அரசாங்கமாகவும் (கவர்ன்மென்ட்) பிரிந்திருக்கும்.

நிர்வாகத்தில், ஆட்சியில் நடைபெறும் குறைகளை, சீர்கேடுகளை விமர்சிப்பது அரசின் உள்ளுறை அதிகாரத்தின் பங்குதாரர்களின் உரிமையாகும். பபாசி “அரசிற்கு” எதிரான நூல் என்று சொல்வது எந்த அளவு அரசியல் அறியாமையில் இந்த அமைப்பினர், அதன் தலைவர் இருக்கிறார் என்பதையே புலனாக்குகிறது. அது என்ன அரசுக்கு எதிரான நூல்? தமிழக அரசுக்கு எதிரான நூலா? இந்திய அரசுக்கு எதிரான நூலா? அது என்ன ஒட்டுமொத்த நாட்டு நலனுக்கும் எதிராக இருக்கிறதா? அப்படியானால் அந்த நூல் முதலில் தடை செய்யப்பட வேண்டும் அல்லவா?

இரண்டாவது பிரச்சினை அரசாங்கத்திற்கு எதிரான நூல் என்பது. அது ஆட்சியின் குறைபாடுகளைக் கண்டிக்கும் எல்லா நூல்களுக்கும் பொருந்தும். மக்களாட்சியில் எதிர்க்கட்சிகளின், ஊடகங்களின் வேலையே அதுதானே? இங்கே என்ன சர்வாதிகார ஆட்சியா நடக்கிறது? தேர்தல் சமயத்தில் இந்து நாளிதழ் ஆசிரியர் என்.ராம் ரஃபேல் ஊழல் குறித்து எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து பாரதி புத்தகாலயம் வெளியிட்டதும், அதை காவல்துறை பறிமுதல் செய்ததும் நினைவுக்கு வருகிறது. பின்னர் தேசிய அளவில் பிரச்சினை பெரிதானவுடன் நூலைத் திருப்பிக் கொடுத்து விட்டார்கள்.

கோலத்தை அடுத்து புத்தகம்

சமீபத்தில் குடியுரிமை சீர்திருத்தச் சட்ட த்திற்கு எதிராக கோலம் போட்டவர்களை கைது செய்து அதிர்ச்சியளித்தது காவல்துறை. பின்னர் தி.மு.க உட்பட அரசியல் கட்சிகள் கண்டனம் செய்தவுடன் கோலம் போட்ட பெண்கள் விடுவிக்கப்பட்டனர். அவர்களின் ஒருவருக்கு பாகிஸ்தானுடன் உள்ள தொடர்புகள் விசாரிக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் சட்டத்திற்குப் புறம்பாக தனி நபரை இழிவு செய்து பேட்டி கொடுத்தது எந்த அளவு காவல்துறை மக்கள் உரிமைகளை நசுக்குவதற்குத் தயாராக இருக்கிறது என்பதையே காட்டுகிறது.

அரசு மற்றும் அரசாங்கத்தின் செயல்பாடுகளை விமர்சிப்பது, கண்டிப்பது என்பது அரசின் மூல அதிகாரத்தின் தோற்றுவாயான மக்களின் உரிமை. அதை கிள்ளுக்கீரையாக மதித்து செயல்பட எடப்பாடி என்ன முடிசூடிய ஜார் மன்னரா என்ற கேள்வி எழுகிறது.

மக்கள் செய்தி மையம் விற்பனை செய்யும் நூல் எதுவும் சட்ட விரோதமானது என்று கருதினால் முதலில் அதை தடை செய்ய வேண்டும். தொடர்புடைய பதிப்பகம் நீதிமன்றத்தை நாடி அதுவும் தடையை தற்காலிகமாக நிறுத்தி வைக்காவிட்டால் அந்த நூலை விற்கவேண்டாம் என்று பபாசி அறிவுறுத்தலாம். அதையும் மீறி விற்பனை செய்தால் தடைசெய்யப்பட்ட நூலைப் பறிமுதல் செய்யலாம்.

எந்த அடிப்படையில் ஒரு அரங்கையே அப்புறப்படுத்துகிறார்கள் என்று வியப்பாக இருக்கிறது. எந்த அளவு அரசின் அச்சுறுத்தல் இருந்தால் பபாசி அமைப்பு இத்தகைய தீவிர நடவடிக்கையை எடுக்கும் என்பதும் வியப்பாக இருக்கிறது. பதிப்பாளர்களையும், எழுத்தாளர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கும் இந்த பிரச்சினையில் முதல்வர் உடனே தலையிட்டு அந்த அரங்கத்தை அமைக்கவும், அந்த பத்திரிகையாளரை விடுவிக்கவும் முன்வர வேண்டும். தடை, கைது ஆகியவற்றை கண்டித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கருத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மக்களாட்சி என்பதன் பொருள் அதுதான். சந்தர்ப்பவசமாக ஆட்சிக்கு வந்த தான் ஒன்றும் முடியரசர் அல்ல என்பதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி புரிந்துகொள்ள வேண்டும்.

கட்டுரையாளர் குறிப்பு: ராஜன் குறை கிருஷ்ணன் - பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

புதன், 15 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon