மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 29 நவ 2020

கிச்சன் கீர்த்தனா: பொங்கல் அவியல்

கிச்சன் கீர்த்தனா: பொங்கல் அவியல்

பொங்கல் நல்வாழ்த்துகள்

வெண்பொங்கலுக்கு சரியான தொடு கறி என்றால் அது இந்த அவியல்தான். காய்கறிகள் அதிகம் விளையும் இந்தப் பருவத்தில் கிடைக்கும் பல வகை காய்கறிகளைக்கொண்டு இந்த அவியல் செய்யப்படுகிறது. சுவையும் சத்தும் அதிகம்கொண்ட இந்த அவியல் 21 வகையான காய்கறிகளைக்கொண்டு செய்தால் சிறப்பு. முடியாவிட்டால், நம்மால் முடிந்த அளவு காய்கறிகளைக்கொண்டு இந்த அவியலைச் செய்து பொங்கலைக் கொண்டாடுவோம்.

என்ன தேவை?

துண்டுகளாக நறுக்கிய முருங்கைக்காய், வாழைக்காய், சேனைக்கிழங்கு, கேரட், பூசணிக்காய், அவரைக்காய், உருளைக்கிழங்கு, மாங்காய், கொத்தவரங்காய் மற்றும் மொச்சை (எல்லாம் சேர்த்து) - அரை கிலோ

பச்சை மிளகாய் - 6

தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

கெட்டித் தயிர் - ஒரு பெரிய கப்

தேங்காய்த் துருவல் - அரை மூடி

சோம்பு - 2 டீஸ்பூன்

சீரகம் - ஒரு டீஸ்பூன்

கடுகு - ஒரு சிட்டிகை

கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - சிறிதளவு

எப்படிச் செய்வது?

தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், சோம்பு, சீரகம் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும். காய்கறிகளில் தண்ணீர் ஊற்றி அலசி வாணலியில் சிறு தீயில் வேகவிடவும். நன்றாக வெந்ததும் அரைத்த விழுது சேர்த்துக் கிளறிக் கொதிப்பதற்கு முன்னால் இறக்கவும். இதில் மேலாக தேங்காய் எண்ணெய், அடித்த தயிரை ஊற்றிக் கிளறவும். வேறொரு வாணலியில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து அவியலில் ஊற்றி, மேலாக கொத்தமல்லி இலை கலந்துகொள்ளவும். பொங்கலோடு இந்த அவியலையும் படையலிட்டு உண்ணலாம்.

நேற்றைய ரெசிப்பி: இளநீர் பொங்கல்

புதன், 15 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon