மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 3 ஆக 2020

அதிக கட்டணம்: 10 ஆம்னி பேருந்துகள் பறிமுதல்!

அதிக கட்டணம்: 10 ஆம்னி பேருந்துகள் பறிமுதல்!

கோவையில் ஆம்னி பேருந்துகளில் ஆர்டிஓ அதிகாரிகள் நடத்திய சோதனையில் கூடுதல் கட்டணம் வசூல் உள்ளிட்ட புகார்கள் காரணமாக 10 ஆம்னி பேருந்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவையில் பொங்கல் பண்டிகையொட்டி கடந்த மூன்று நாட்களாக ஆம்னி பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகரித்தது. இதைப் பயன்படுத்தி சிலர் கூடுதல் கட்டணம் வசூலித்து வந்தனர். இந்த நிலையில், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள், அனுமதிச்சீட்டு, வரி செலுத்தாமல் இயக்கப்படும் பேருந்துகள், முறைகேடாகப் பயன்படுத்தும் பள்ளி பேருந்துகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என கோவை போக்குவரத்து இணை ஆணையர் உமா சக்தி உத்தரவிட்டார்.

மேலும், சோதனையின்போது அதிக கட்டணம் வசூலிக்கும் மற்றும் அனுமதிச்சீட்டு இல்லாத ஆம்னி பேருந்துகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். செலுத்தப்பட்ட வரியின் உண்மை தன்மை சரிபார்த்த பின்புதான் வாகனத்தைத் தொடர்ந்து இயக்க அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார். மேலும், பேருந்துகளில் ஜனவரி 11ஆம் தேதி முதல் வரும் 21ஆம் தேதி வரை ஆய்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

இதனைத்தொடர்ந்து வட்டாரப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தலைமையில் ஆம்னி பேருந்துகளை ஆய்வு செய்ய ஏழு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்தக் குழுவினர் கடந்த மூன்று நாட்களாக ஆம்னி பேருந்துகளில் ஆய்வு நடத்தினர். சுமார் 84 ஆம்னி பேருந்துகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில், 10 ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதும், வரி செலுத்தாமல் இயக்கப்பட்டதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் ஆம்னி பேருந்துகளைப் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஆர்டிஓ அலுவலகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து வட்டார போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது, “பொங்கல் பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்துகளில் ஆய்வு நடத்தப்பட்டது. கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பான புகார்கள் அதிகம் வந்தது. இது தொடர்பாக தனிக்குழு அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில், கூடுதல் கட்டணம் வசூலித்தல், வரி செலுத்தாத மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்த 10 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. இதில், அபராதத் தொகை செலுத்திய எட்டு பேருந்துகள் நேற்று (ஜனவரி 14) விடுவிக்கப்பட்டன. முறையாக வரி செலுத்தாத இரண்டு பேருந்துகள் விடுவிக்கப்படவில்லை. இந்த சோதனை மூலமாக ரூ.70,000 வரை பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அடுத்து சென்னை, மதுரைக்கு இயக்கப்படும் பேருந்துகளில் அதிகளவில் புகார்கள் வருகிறது. சிறப்புக் குழுவினர் வரும் 21ஆம் தேதி வரை பேருந்துகளில் ஆய்வு நடத்தவுள்ளனர்” என்று தெரிவித்தனர்.

புதன், 15 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon