மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஏப் 2020

சமையல் குறிப்பு புத்தகம் கூட விற்கக் கூடாது: சு.வெங்கடேசன்

சமையல் குறிப்பு புத்தகம் கூட விற்கக் கூடாது: சு.வெங்கடேசன்

சென்னை புத்தகக் கண்காட்சியில் அரசுக்கு எதிராக புத்தகம் விற்பனை செய்ததாகக் கூறி அரங்கு அகற்றப்பட்டதற்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை புத்தகக் கண்காட்சியில் மக்கள் செய்தி மையம் அரங்கில் அரசுக்கு எதிரான புத்தகங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், அரங்கை காலி செய்யும்படியும் புத்தகக் கண்காட்சியை நடத்தும் பபாசி அமைப்பு, பதிப்பாளர் அன்பழகனுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதனையடுத்து, மக்கள் செய்தி மையம் அரங்கு அகற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பபாசி அளித்த புகாரின் பேரில் அன்பழகனை காவல் துறை கைது செய்தது. இதற்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் என பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளது.

சென்னை புத்தகக் கண்காட்சியில் நேற்று கீழடியும் ஈரடியும் என்ற தலைப்பில் எழுத்தாளரும், மதுரை மக்களவை உறுப்பினருமான சு.வெங்கடேசன் உரையாற்ற இருந்தது. வெங்கடேசன் மேடைக்கும் வந்து உரையாற்றத் துவங்கிவிட்டார். ஆனால், “கீழடியும் ஈரடியும் என்ற தலைப்பில் நான் உரையாற்றப் போவதில்லை. ஏன் உரையாற்றப் போவதில்லை என்பதை மட்டும் சொல்லிவிட்டு அமரலாம் என்று இருக்கிறேன்.” என்று குறிப்பிட்டவர் தொடர்ந்தார்.

“சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வருவது ஒரு கொண்டாட்டம். சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக சென்னை புத்தக கண்காட்சிக்கு வந்துகொண்டிருக்கிறேன். ஆனால், இவ்வளவு மனவருத்தத்தோடு ஒரு புத்தகக் கண்காட்சியில் நின்றுகொண்டிருப்பது இதுதான் முதல் முறை. மக்கள் செய்தி மையம் அரங்கம் அகற்றப்பட்டதும், அந்த கடையை அகற்ற பபாசி அளித்த விளக்க நோட்டீஸும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. அரசுக்கு எதிராக புத்தகத்தை வைத்திருப்பது விதிமுறை மீறல் என்று பபாசி சொல்லியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அப்படியென்றால் மகாத்மா காந்தி, அண்ணல் அம்பேத்கரின் ஒரு புத்தகத்தைக் கூட இந்த கண்காட்சியில் வைக்கக் கூடாது. பேரறிஞர் அண்ணாவின் எந்த எழுத்தையும் இந்த புத்தகக் கண்காட்சியில் வைக்கக் கூடாது. ஏன் சமையல் கலை புத்தகத்தைக் கூட வைக்கக் கூடாது? சமையல் கலை புத்தகத்தில் வெங்காயத்தை பற்றி குறிப்பு இருக்கும். அது மத்திய அரசுக்கு எதிரானது. உப்பு பற்றிய குறிப்பு இருக்கும். அது மாநில அரசுக்கு எதிரானது.

தெருமுனை கூட்டத்திற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்றால் அரசுக்கு எதிராக பேசக்கூடாது என காவல் துறை எழுதிக் கேட்கலாம். பபாசி அப்படிக் கேட்கலாமா? தமிழகத்தில் இருக்கும் பதிப்புத் துறையின் மரபு எவ்வளவு பெரியது. சர்ச்சைக்குரிய புத்தககத்தை வைத்திருக்கிறார் என்று கூறுகிறார்கள். கீழடியை விட சர்ச்சைக்குரியது இருக்கப் போகிறது. ஏன் கீழடி என்று சொன்னாலே மத்திய அரசுக்கு எதிரானது என்று தான் நேரடியான பொருள். ஏனெனில் மத்திய அரசு தனக்கு எதிராக கீழடியை கருதுகிறது. அதனை அகற்றிவிடுவீர்களா? பபாசிக்கு பல்வேறு அழுத்தங்கள் இருக்கலாம். அதற்காக கருத்துரிமையை, எழுத்தாளனின் உரிமையை, கருத்து சுதந்திரத்தை காவு கொடுக்க முடியாது” என்று பேசினார்.

செவ்வாய், 14 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon