மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 5 ஏப் 2020

நல்லா இருந்த மனுசனுக்கு என்ன ஆச்சு? பொன்.ராதாவுக்கு ஜெயக்குமார் பதில்!

நல்லா இருந்த மனுசனுக்கு என்ன ஆச்சு? பொன்.ராதாவுக்கு ஜெயக்குமார் பதில்!

ஐந்து ஆண்டுகள் மத்திய அமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் தமிழகத்திற்கு என்ன செய்தார் என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

கன்னியாகுமரியில் எஸ்.எஸ்.ஐ வில்சன் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “தமிழகம் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறிவருகிறது. இதைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னாள் முதல்வா் ஜெயலலிதா காலத்திலிருந்தே இதை நான் கூறிவருகிறேன்” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் இன்று (ஜனவரி 14) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமாரிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “நன்றாக இருந்த மனிதர் ஏன் இப்படி ஆகிவிட்டார் என்று தெரியவில்லை. ஜெயலலிதா காலத்திலிருந்து தமிழக அரசை குற்றம்சொல்வது அவருக்கு வாடிக்கையாக உள்ளது. அவருடைய கருத்தை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. அதனை நாங்கள் பாஜகவின் கருத்தாக எடுத்துக்கொள்வதில்லை” என்று தெரிவித்தார்.

பொன்.ராதாகிருஷ்ணன் ஐந்து ஆண்டுகள் மத்திய அமைச்சராக இருந்தபோது தமிழகத்திற்கு என்ன செய்தார் எனக் கேள்வி எழுப்பிய ஜெயக்குமார், “மத்திய அரசிடம் இணக்கமாக இருந்தும், வாதாடியும் தமிழக அரசின் முயற்சியில் அதிகளவில் நிதிகளைப் பெற்றுள்ளோம். இன்றைக்கு தமிழகம் எல்லா வளமும் பெற்ற மாநிலமாக உள்ளது. பல விருதுகளைக் குவித்து வருகிறோம். தமிழகத்தில் தீவிரவாதம் ஒடுக்கப்பட்டது, சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுகிறது என மத்திய அரசுதான் அங்கீகாரம் அளித்தது. மத்திய அரசை சார்ந்த கட்சியில்தான் பொன்.ராதாகிருஷ்ணன் இருக்கிறார். அப்படியென்றால் அவர் மத்திய அரசை எதிர்த்து குற்றம்சாட்டுகிறாரா?” என்றும் சந்தேகம் எழுப்பினார்.

மேலும், “மத்திய அமைச்சராக இருந்தபோது பல திட்டங்களைக் கொண்டுவந்திருக்கலாம். ஆனால், ஒரு திட்டத்தைக் கூட அவரால் கொண்டுவர முடியவில்லை.பாஜக தலைவர் பதவி கிடைக்காத விரக்தியில் பொன்.ராதாகிருஷ்ணன் இவ்வாறு பேசுகிறாரா? எங்கோ இருக்கும் கோபத்தை இங்கு காட்டுகிறார். விரக்தியின் வெளிப்பாடாகவே இவ்வாறு அவர் பேசுகிறார் என்றே எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது” என்றும் அவர் கூறினார்.

செவ்வாய், 14 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon