மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 8 ஏப் 2020

தேர்தல் அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுத்த அமைச்சர்கள்!

தேர்தல் அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுத்த அமைச்சர்கள்!

27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நிறைவுற்று, மறைமுகத் தேர்தலும் முடிந்த நிலையில், தேர்தல் அதிகாரிகளாக இருந்தவர்களுக்கு அமைச்சர்கள் அதிகளவில் நெருக்கடிகள் கொடுத்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.

பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி, மற்றும் ஏழு மாவட்டங்களைத் தவிர்த்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27, 30 ஆகியத் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் இருகட்டமாக நடைபெற்றது. ஜனவரி 2ஆம் தேதி தொடங்கி மறுநாள் வரை நீடித்த வாக்கு எண்ணிக்கையில் பல இடங்களில் குளறுபடிகளும், குழப்பங்களும், கலவரங்களும் நடந்தேறின.

தேர்தலில் அதிமுகவினர் வெற்றிபெற்றதாக அறிவிக்கக் கோரி ஒன்றிய, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்புகொண்டு, சொற்ப வாக்குகள் வித்தியாசம் இருந்தால் ஆளுங்கட்சிக்குச் சாதகமாக அறிவித்துவிடுங்கள் என்று பேசியுள்ளனர்.

வட மாவட்டத்தில் உள்ள ஒரு சீனியர் அமைச்சர், உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியைத் தொடர்புகொண்டு, சில ஒன்றியங்களில் தலைவர் தேர்தலை தள்ளிவைக்க வேண்டுமென கூறிவிட்டு, அதிகாரிகளைக் கொஞ்சம் ஒத்துழைக்கச் சொல்லுங்கள் என்று ரெக்வஸ்ட் செய்துள்ளார். உள்ளாட்சித் துறை அமைச்சரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசியுள்ளார். தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு அமைச்சர், அதிமுகவினர் வெற்றிபெற்றதாக அறிவிக்கச் சொல்லி நிர்வாகிகளை வைத்து தேர்தல் அதிகாரிகளிடம் பேசியுள்ளார்.

இதுபோலவே கர்நாடக எல்லையோரம் உள்ள மாவட்டத்தில் திமுக வெற்றிபெற்ற ஒரு ஒன்றியத்தில், தலைவர் தேர்வு செய்வதை கேன்சல் செய்யச் சொல்லி அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினர் ஒருவரும் கடுமையான நெருக்கடிகள் கொடுத்துள்ளனர். ஆனால், அதற்கு பணிந்துகொடுக்காத அதிகாரிகள், அவசர அவசரமாக திமுக வெற்றிபெற்றதாக அறிவித்தார்கள்.

ஒரு சில இடங்களில் மட்டுமே ஆளுங்கட்சிக்கு ஒத்துழைப்பு கொடுத்திருப்பதாக சொல்கிறார்கள் அதிமுகவினர். எனினும், பெரும்பாலான இடங்களில் தாங்கள் சொன்னதை அதிகாரிகள் கேட்கவேயில்லை என அமைச்சர்கள் புலம்பியுள்ளனர்.

அன்றிருந்த சூழலில் அதிகாரிகள் ரிசல்ட்டை மாற்றி சொல்லியிருந்தாலும், மறு தேதி அறிவித்திருந்தாலும், அதிகாரிகளுக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டிருக்கும் என்கிறார்கள் திமுகவினர்.

செவ்வாய், 14 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon