மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 9 ஆக 2020

கிச்சன் கீர்த்தனா: இளநீர் பொங்கல்!

 கிச்சன் கீர்த்தனா: இளநீர் பொங்கல்!

சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், பழப் பொங்கல், பால் பொங்கல், வெறும் பொங்கல் என ஐந்து வகை பொங்கல்களைச் செய்து பொங்கல் திருநாளைக் கொண்டாடுவது நம் வழக்கம். மக்களோடு கால்நடைகளும் பறவைகளும்கூட பொங்கல்களை ருசித்து உண்பது உண்டு. அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சர்க்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுக் கொண்டாடுவது சிறப்பானது. நகர நாகரிகத்தில் இது சாத்தியமில்லை என்றாலும், கூடுமானவரை பாரம்பரியத்தோடு கொண்டாடுவது பலனைத் தரும். நெல்லை, குமரி வட்டாரங்களில் செய்யப்படும் இந்த இளநீர் பொங்கல் சுவையும் மணமும் உடையது. சூரிய பகவானுக்கு விருப்பமானது என்றும் சொல்வார்கள்.

என்ன தேவை?

பச்சரிசி - 2 கப்

இளநீர் - 4 கப்

பாசிப்பருப்பு - அரை கப்

பொடித்த வெல்லம் - 2 கப்

முந்திரி - 10

திராட்சை - 10

பச்சைக் கற்பூரம் - 2 சிட்டிகை

தேங்காய்ப் பால் - ஒன்றரை கப்

ஏலக்காய்த்தூள் - சிறிதளவு

இளநீர் வழுக்கைத் தேங்காய் (மசித்தது) - ஒரு கப்

குங்குமப்பூ - 2 சிட்டிகை

எப்படிச் செய்வது?

கடாயில் பாசிப்பருப்பை வாசனை வரும் வரை வறுத்து வைத்துக்கொள்ளவும். இந்த பருப்புடன் அரிசியைச் சேர்த்துக் கழுவி குக்கரில் போட்டு இளநீர், இளநீர் வழுக்கைத் தேங்காய், தேங்காய்ப்பால் சேர்த்து நான்கு விசில்விட்டு குழைய வேகவிடவும். சூடு தணிந்ததும் குக்கரைத் திறந்து பொடித்த வெல்லம் சேர்த்துக் கிளறவும். இப்போது பொங்கல் இளகி வரும். கெட்டியாகும் வரை கிளறி வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துக் கலந்து குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள், பச்சைக் கற்பூரம் சேர்த்து மீண்டும் கிளறவும். இறக்கி வைத்து ஆண்டவனுக்குப் படையலிட்டு விநியோகிக்கலாம்.

அட்வான்ஸ் பொங்கல் தின வாழ்த்துகள்.

நேற்றைய ரெசிப்பி: சேமியா பிரியாணி

திங்கள், 13 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon