மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 31 மா 2020

போகி: அதிகரித்த காற்றுமாசு!

போகி: அதிகரித்த காற்றுமாசு!

போகிப் பண்டிகையால் சென்னையில் காற்று மாசின் அளவு அதிகரித்துள்ளது.

தமிழகம் முழுவதும் போகிப் பண்டிகை இன்று (ஜனவரி 14) கொண்டாடப்பட்டு வருகிறது. வீடுகளில் உள்ள பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்துவதும், மனதில் உள்ள தீய எண்ணங்களையும் நீக்குவதற்காகவுமே போகிப் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. ஆனால், சுற்றுச் சூழலுக்கு பாதிப்பினை ஏற்படுத்தக்கூடிய பிளாஸ்டிக், டயர்கள் உள்ளிட்ட பொருட்களை மக்கள் தீயிலிடுகின்றனர். இதனால் போகிப் பண்டிகையின் போது அதிகளவில் காற்று மாசடைகிறது.

இந்த நிலையில் நெகிழி, டயர்கள், உள்ளிட்ட பொருட்கள் எரிப்பதைத் தவிர்த்து புகை இல்லா போகியினைக் கொண்டாடுவோம் என்று தமிழக அரசு அழைப்பு விடுத்திருந்தது. இருப்பினும் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் நெகிழிப் பைகள் , டயர்கள், ஒயர்கள் என சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் விதமாகவே போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டது. குறிப்பாக சென்னையில் காற்றுமாசு அதிக அளவில் ஏற்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை காலை முதலே மக்கள் தேவையற்ற பொருட்களை எரிக்க தொடங்கிவிட்டனர். இதனால் ஏற்பட்ட அதிக அளவு புகை மூட்டத்தால் எதிரே வரக்கூடிய வாகனங்கள் கூட தெரியாத நிலை ஏற்பட்டது. வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்குகளை எரிய விட்டுச் சென்றன. குறிப்பாக சென்னையைப் பொறுத்தவரை அண்ணாசாலை, ஆலந்தூர், வேளச்சேரி, மணலி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காற்று மாசு அதிக அளவில் ஏற்பட்டுள்ளது.

சென்னை மாநகரத்தின் 15 இடங்களில் காற்றின் தரம் கண்காணிக்கப்பட்டு, காற்றின் மாதிரியை ஆய்வு செய்து, காற்றின் தரத்தின் அளவு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்படும் என்று சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.

இந்த நிலையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட அறிக்கையில், “ராயபுரத்தில் அதிக அளவு காற்று மாசு ஏற்பட்டுள்ளது. இதற்கான தர குறியீடு 349ஆகவும் ,சோழிங்கநல்லூரில் குறைந்த அளவு காற்று மாசு ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது. இதன் தரக் குறியீடு 155 என மாசு கட்டுப்பாடு வாரியம் கூறியுள்ளது

செவ்வாய், 14 ஜன 2020

அடுத்ததுchevronRight icon