மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 22 ஜன 2021

கூட்டணி பற்றி பேச வேண்டாம்: அதிமுக

கூட்டணி பற்றி பேச வேண்டாம்: அதிமுகவெற்றிநடை போடும் தமிழகம்

கூட்டணி நிலைப்பாடு குறித்து பொதுவெளியில் பேச வேண்டாம் என்று அதிமுகவினருக்கு பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளனர்.

2019 மக்களவைத் தேர்தல் முதல் அதிமுக கூட்டணியில் பாஜக அங்கம் வகித்துவருகிறது. இதனால் சிறுபான்மையினர் வாக்குகள் அதிமுகவுக்குக் கிடைக்கவில்லை என்று அதிமுகவுக்குள்ளே பலரும் கருத்துகள் தெரிவித்தனர். உள்ளாட்சித் தேர்தலின்போது இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர் நிலோபர் கபில், பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் இல்லை என்று பேசியிருந்தார்.

மேலும், மக்களவை முன்னாள் உறுப்பினர் அன்வர் ராஜா, ‘சிஏஏவை ஆதரித்ததால் இஸ்லாமியர்கள் அதிமுகவுக்கு வாக்களிக்கவில்லை’ என்று வெளிப்படையாகவே கருத்து தெரிவித்தார். மேலும், தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘கூட்டணியிலிருந்து பாஜக விலகினால் அதிமுகவுக்கு Bumper Price’ என்று சொல்லியிருந்தார். இது அதிமுக - பாஜக வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று (ஜனவரி 12) வெளியிட்ட கூட்டறிக்கையில், “அதிமுக அமைத்திருக்கும் தேர்தல் கூட்டணியின் நிலைகுறித்து கழகத்தைச் சேர்ந்த சிலர் தங்கள் தனிப்பட்ட கருத்துகளையும், அரசியல் பார்வைகளையும் பொதுவெளியிலோ, பேட்டிகள் என்ற பெயரில் ஊடகங்களிலோ தெரிவிக்க வேண்டாம். மிகுந்த கட்டுப்பாடும், ஒழுங்கும், ஜனநாயகப் பண்பும் நிறைந்த அதிமுகவின் தற்போதைய கூட்டணி குறித்தும், தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய அரசியல் நடவடிக்கைகள் பற்றியும் தீர ஆராய்ந்து, கழகத்தின் கொள்கை கோட்பாடுகளின்படி முடிவெடுக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், “கொள்கை முடிவுகளைப் பற்றிய தனி நபர்களின் விமர்சனங்களும், கருத்துகளும் தேவையற்ற விவாதங்களை உருவாக்கி கழகத்துக்கு ஊறுவிளைவிக்கும் என்பதால் அத்தகைய செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று கழகத்தவர்களைக் கண்டிப்புடன் நெறிப்படுத்த கடமைப்பட்டிருக்கிறோம்” என்று குறிப்பிட்ட அவர்கள்,

கழகத்தின் அரசியல் நிலைப்பாடுகள் அனைத்தும் செயற்குழு, பொதுக்குழுவில் விவாதிக்கப்பட்டு அதற்கேற்ப தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டிருப்பதை நினைவில்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இதில் அன்வர் ராஜாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை எனினும் கூட அவரை மனத்தில் வைத்துதான் இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள் அதிமுகவினர்.

ஞாயிறு, 12 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon