மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 23 செப் 2020

பின் வாசல் வழியாக அனுப்பப்பட்ட நெல்லை கண்ணன் !

 பின் வாசல் வழியாக  அனுப்பப்பட்ட நெல்லை கண்ணன் !

சேலம் மத்திய சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட நெல்லை கண்ணனுக்கு சிறைவாசலில் யாரும் வரவேற்பு கொடுத்து அது காட்சிகளாக பதிவு செய்யப்பட்டுவிடக் கூடாது என்ற திட்டத்தின் அடிப்படையில், சிறையின் பின் வாசல் வழியாக விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.

சோலியை முடி என்ற பேச்சின் அடிப்படையில் நெல்லை கண்ணன் மீது தொடரப்பட்ட வழக்கில் ஜனவரி 13 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவருக்கு ஜனவரி 10 ஆம் தேதி நெல்லை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இதையடுத்து 11 ஆம் தேதி காலை 7 மணிக்கு அவர் சேலம் மத்திய சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவார் என்று தகவல் கிடைத்து எஸ்டிபிஐ கட்சியினர், பல தமிழ் அமைப்புகள், ஆர்வலர்கள் சேலம் சிறைவாசலில் திரண்டனர். நெல்லை கண்ணனுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க வேண்டும் என்பதே அவர்களது திட்டம்.

இதை அறிந்துகொண்ட சிறைத் துறை ,மேலிட உத்தரவின்படி திடீரென திட்டத்தை மாற்றியது. நெல்லை கண்ணனை அழைத்துச் செல்வதற்காக வந்திருந்த அவரது மகன் சுகா, உதவியாளர் பாஸ்கர் ஆகிய இருவரை மட்டும் சிறைக்குள் அவர்கள் வந்த காரிலேயே அனுமதித்தனர். சிறை வளாகத்தில் அவர்களது கார் நிறுத்தப்பட, நெல்லை கண்ணன் சிறையில் இருந்து வீல் சேரில் அழைத்து வரப்பட்டார். அங்கிருந்தே காரில் நெல்லை கண்ணனை ஏற்றினார்கள். அப்போது அந்த காரின் முன்னும் பின்னும் இரு எஸ்கார்டு வாகனங்கள் வந்து நின்றன.

மெயின் வாசல் வழியாக திரும்புவதற்காக காரை திருப்ப முயல சிறைத் துறை அதிகாரிகள் நெல்லை கண்ணன் மகனிடம், ‘உங்க முன்னாடி நிக்கிற எஸ்கார்டு வண்டிய ஃபாலோ பண்ணுங்க’ என்று உத்தரவிட்டனர். வேறு வழியின்றி நெல்லை கண்ணன் ஏறிய கார் அந்த எஸ்கார்டு வண்டியை ஃபாலோ செய்தது.

சிறைவாசலில் நெடுநேரமாக காத்திருந்தும் நெல்லை கண்ணன் வராமல் போகவே பிறகு விசாரிக்கும்போதுதான் ‘பத்திரிகையாளர்களுக்கு பயந்து பின் வாசல் வழியாக அவரை அனுப்பிய தகவல் வெளிவந்தது.

ஞாயிறு, 12 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon