மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 18 செப் 2020

ஜேஎன்யு மாணவர்களை சந்தித்த உதயநிதி

ஜேஎன்யு மாணவர்களை சந்தித்த உதயநிதி

ஜேஎன்யு மாணவர்களை சந்தித்து திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஆறுதல் கூறினார்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் கடந்த 5ஆம் தேதி மாலை முகமூடி அணிந்து சபர்மதி விடுதியின் உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், உருட்டுக்கட்டை, இரும்புக் கம்பி ஆகியவற்றைக் கொண்டு மாணவர்களை கண்மூடித்தனமாகத் தாக்கினர். இதில், ஜேஎன்யு மாணவர் சங்கத் தலைவர் ஆயிஷ் கோஷ் உள்ளிட்ட 34 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்துக்கு இந்து ராஷ்மி தள் அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், இதுவரை குற்றவாளிகளை காவல் துறையினர் கைது செய்யவில்லை. மாறாக, பல்கலைக்கழக மாணவர் சங்கத்தினர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், டெல்லி காவல் துறை வெளியிட்ட தாக்குதல் நடத்தியவர்கள் பட்டியலில், ஆயிஷ் கோஷின் பெயரும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தாக்குதலுக்கு ஆளான மாணவர்களை கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

அந்த வகையில் திமுக இளைஞரணிச் செயலாளரும் நடிகருமான உதயநிதி இன்று (ஜனவரி 12) ஜேஎன்யு பல்கலைக் கழக விடுதிக்குச் சென்று தாக்குதலில் காயமடைந்த மாணவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

அவர்களிடம் தாக்குதல் நடத்தப்பட்டது எப்படி, காவல் துறையினர் எவ்வாறு நடவடிக்கை மேற்கொள்கின்றனர், போராட்டங்கள் எந்த நிலையில் உள்ளது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கேட்டறிந்த உதயநிதி, மாணவர்களுக்கு ஆதரவாக திமுக இருக்கும் என நம்பிக்கையும் அளித்தார். மேலும், சூறையாடப்பட்ட பல்கலைக்கழக வளாகத்தையும், விடுதியையும் பார்வையிட்டார் உதயநிதி ஸ்டாலின்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி, “ஜேஎன்யு மாணவர்கள் மீதான தாக்குதல் மத்திய பாஜக அரசின் திட்டமிட்ட செயல். சமூக நீதிக்காகவும் மாணவர்களுக்காகவும் திமுக எப்போதும் துணை நிற்கும்” என்று குறிப்பிட்டார்.

அப்போது திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உடனிருந்தனர். இதனைத் தொடர்ந்து மாணவர் அமைப்பின் தலைவர் ஆயிஷ் கோஷினையும் உதயநிதி சந்திக்க இருக்கிறார்.

ஞாயிறு, 12 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon