மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 18 செப் 2020

அமைச்சரின் உதவியாளர், ஓட்டுனர் பலி!

அமைச்சரின் உதவியாளர், ஓட்டுனர் பலி!

புதுக்கோட்டை அருகே நடந்த சாலை விபத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் வெங்கடேசன், ஓட்டுனர் செல்வம் ஆகிய இருவரும் பலியாகினர்.

புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூரைச் சேர்ந்த பவ் என்கிற வெங்கடேசன், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளராக இருந்தார். புதுக்கோட்டை மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளராகவும் பதவிவகித்தார். இந்த நிலையில் நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த மறைமுகத் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதன்பிறகு அமைச்சர் புதுக்கோட்டையிலிருந்து கார் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து சென்னைக்கு விமானத்தில் புறப்பட்டார்.

அவரை திருச்சியில் வழியனுப்பிவைத்து விட்டு வெங்கடேசனும், கார் ஓட்டுனர் இடையப்பட்டியைச் சேர்ந்த செல்வமும் சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். கார் கிளிக்குடி வீரபெருமாள் பட்டி அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்திலுள்ள புளிய மரத்தில் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இருவரது உடலை மீட்ட போலீசார் வெங்கடேசன் உடலை இலுப்பூர் அரசு மருத்துவமனையிலும், ஓட்டுனர் செல்வத்தின் உடலை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். இதுதொடர்பாக அன்னவாசல் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்தத் தகவல் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில், அவர் உடனடியாக புதுக்கோட்டைக்கு புறப்பட்டுச் சென்றார்.

இதுதொடர்பாக விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பவ் நீ இந்த உலகில் இல்லை என்ற தகவல் அறிந்து என் இதயம் நொறுங்கிப்போனது. என் மனதில் பல நினைவுகள் வந்து செல்கின்றன. 31 வயதில் உன்னுடைய இழப்பு என்பது எனக்கு வேதனையான வலியாக உள்ளது. இந்த கடினமான சூழ்நிலையில் என்னை ஆறுதல்படுத்த நீ இல்லை. என் அன்பு பவ்வின் ஆன்மா சாந்தியடையட்டும்” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

ஞாயிறு, 12 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon