மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 23 செப் 2020

நாளை தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கும்!

நாளை தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கும்!

ஓமன் மன்னர் சுல்தான் மறைவுக்கு நாளை இந்தியாவில் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

50 ஆண்டுகளுக்கு மேல் ஓமன் நாட்டை ஆண்டுவந்த மன்னர் சுல்தான் கபூஸ் பின் சையத் அல் சையத், உடல்நலக்குறைவால் கடந்த 10ஆம் தேதி தனது 79ஆவது வயதில் காலமானார். இந்த நிலையில் மறைந்த ஓமன் மன்னர் சுல்தானுக்கு மரியாதை செலுத்தும் வகையில், நாளை (13.01.2020) துக்க நாளாக அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் என்றும் இந்திய அரசாங்கம் அறிவித்தது.

இதுகுறித்து பிரதமர் மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்திருந்தார், "சுல்தான் கபூஸ் பின் சையத் அல் சையத் காலமானதை அறிந்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன். அவர் ஒரு தொலைநோக்குத் தலைவராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தார். அவர் ஓமனை நவீன மற்றும் வளமான தேசமாக மாற்றினார்" என்று பதிவுசெய்திருந்தார்.

இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்களுக்கு எதிராக சட்டங்கள் இயற்றப்பட்டு, தேசம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இதற்கிடையே வெள்ளிக்கிழமை (10.01.2020) மறைந்த இஸ்லாமிய நாடான ஓமன் நாட்டின் அதிபருக்கு மூன்று நாட்கள் கழித்து இந்திய அரசாங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ஓமன் நாட்டின் கலாச்சாரத் துறை அமைச்சராக இருந்த ஹைதம் பின் தாரிக் (65) அந்நாட்டின் புதிய அதிபராக நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 12 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon