மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 18 செப் 2020

திமுகவின் இரண்டாவது புகார்!

திமுகவின் இரண்டாவது புகார்!

மறைமுகத் தேர்தலில் முறைகேடு நடந்ததாகக் கூறி இரண்டாவது முறையாகத் தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்தது.

உள்ளாட்சி மறைமுகத் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி மாநிலத் தேர்தல் ஆணையத்தில் நேற்று (ஜனவரி 11) மாலை திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமியைச் சந்தித்த திமுக எம்.பி வில்சன், சட்டத் துறை செயலாளர் கிரிராஜன் ஆகியோர் புகாரை அளித்தனர். அதில், மறைமுகத் தேர்தல் முடிந்து முடிவு அறிவிப்பதில் காலதாமதம் ஏற்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வில்சன், “திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுக வேட்பாளர் சவுந்தரபாண்டியன் 10 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுவிட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சுரேஷுக்கு 5 வாக்குகள்தான் கிடைத்தன. ஆனால், தேர்தல் அதிகாரியை போனில் அழைத்த மாவட்ட ஆட்சியர், தேர்தலை ரத்து செய்ய உத்தரவிட்டிருக்கிறார். தேர்தல் விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தலையிடுவது சரியல்ல. இதுதொடர்பாக தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டோம்” என்று குறிப்பிட்டார்.

மேலும், “இதுதவிர காலையில் அளித்த புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்துக் கேட்டோம். திமுக அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுவிடும் என்பதால் சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி தேர்தலைத் தள்ளிவைத்துவிட்டனர். இதுகுறித்து முறையிட்டுள்ளோம். நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளனர். தேர்தலை நிறுத்துவது ஜனநாயகத்தில் சரியல்ல” என்றும் கூறினார்.

ஞாயிறு, 12 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon