மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 23 செப் 2020

உள்ளாட்சியில் எந்தக் கட்சிக்கு எத்தனை இடங்கள்!

உள்ளாட்சியில் எந்தக் கட்சிக்கு எத்தனை இடங்கள்!

மறைமுகத் தேர்தலில் கட்சிகள் பெற்ற இடங்கள் குறித்துத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், ஒன்றியப் பெருந்தலைவர், ஒன்றியத் துணைத் தலைவர், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பதவியிடங்களுக்கான மறைமுகத் தேர்தல் நேற்று (ஜனவரி 11) நடைபெற்றது. மாவட்ட ஊராட்சித் தலைவருக்கு மொத்தம் உள்ள 27 மாவட்டங்களில் 26 மாவட்டங்களுக்குத் தேர்தல் நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் போதிய உறுப்பினர்கள் வருகை தராததால் ஒத்திவைக்கப்பட்டதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ஊராட்சி ஒன்றியங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையைக் காரணம் காட்டி 12 இடங்களிலும், போதிய உறுப்பினர்கள் வருகையின்மையால் 13 இடங்களிலும், தேர்தல் நடத்தும் அலுவலருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் இரண்டு இடங்களிலும் என மொத்தம் 27 இடங்களில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

மறைமுகத் தேர்தல் முடிந்த நிலையில் அரசியல் கட்சிகள் பெற்ற இடங்கள் குறித்த தகவலைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், “மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியிடங்களில் அதிமுக 13 இடங்களிலும், திமுக 12 இடங்களிலும், பாமக ஓர் இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் பதவியிடங்களில் அதிமுக 7 இடத்திலும், திமுக 11 இடத்திலும், பாமக 3 இடத்திலும், பாஜக, காங்கிரஸ் தலா 2 இடங்களிலும், தேமுதிக ஓர் இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றியத் தலைவர் பதவியிடங்கள்

“மறைமுகத் தேர்தல் நடைபெற்ற 289 ஒன்றியங்களில் அதிமுக 140 இடங்களிலும், திமுக 125 இடங்களிலும் பாமக 7 இடங்களிலும், காங்கிரஸ் 5 இடங்களிலும், பாஜக 3 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் 3 இடங்களிலும், அமமுக 2 இடங்களிலும், சுயேச்சைகள் 2 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளனர்” என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஒன்றியத் துணைத் தலைவர் பதவியிடங்கள்

ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவருக்கான மொத்தமுள்ள இடங்களில் கவுன்சிலர்களின் போதிய வருகையின்மை காரணமாக 41 இடங்களில் மறைமுகத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. மீதமுள்ள 273 பதவியிடங்களுக்கு நடந்த தேர்தலில் அதிமுக 94 இடங்களிலும், திமுக 107 இடங்களிலும், பாமக 19 இடங்களிலும், காங்கிரஸ் 8 இடங்களிலும், தேமுதிக 7 இடங்களிலும், அமமுக 5 இடங்களிலும், பாஜக 4 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 3 இடங்களிலும், எஸ்டிபிஐ ஓர் இடத்திலும், சுயேச்சைகள் 25 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்” என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

ஞாயிறு, 12 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon