மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 18 செப் 2020

கடைசி நிமிடத் திருப்பம்: குலுக்கலில் வென்றவர்கள்!

கடைசி நிமிடத் திருப்பம்: குலுக்கலில் வென்றவர்கள்!

தமிழகத்தின் 27 மாவட்டங்களுக்கு நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் பல இடங்களில் அதிமுக மற்றும் திமுக கூட்டணியைச் சேர்ந்தவர்கள் சம அளவிலான இடங்களைப் பெற்றிருந்தனர். இதனால் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி அங்கெல்லாம் குலுக்கல் முறையில் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியத்தில் திமுக மற்றும் அதிமுக கூட்டணி (அதிமுக - 8, தேமுதிக - 1) தலா 9 இடங்களைப் பெற்று சரிசமமாக இருந்ததால் யாருக்கும் வெற்றி கிடைக்கும் என்பது கேள்விக்குறியாக இருந்தது. திமுக சார்பில் ஒன்றியத் தலைவர் பதவிக்கு ஆலத்தூர் ஒன்றிய திமுக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி போட்டியிட்டார். பெரும்பான்மைக்கு ஓர் இடம் கூடுதலாகத் தேவை என்ற நிலையில் தேமுதிக உறுப்பினரை தங்கள் பக்கம் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை திமுக நடத்தியது. இதனால் அதிமுக தரப்பு, தேமுதிக உறுப்பினரைக் கோழி அடைகாப்பது போல பாதுகாத்து வந்தனர்.

மறைமுகத் தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில் அதிமுக, திமுக என இரு கட்சிகளுக்கும் சரிசமமாக தலா 9 வாக்குகள் பதிவாகியிருந்தன. இதைத் தொடர்ந்து குலுக்கல் முறையில் ஒன்றியப் பெருந்தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணி நடைபெற்றது. திமுக வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதிமுக வேட்பாளரின் பெயர் ஒரு சீட்டில் எழுதப்பட்டு, குலுக்கல் நடைபெற்றது. அதில், திமுகவின் கிருஷ்ணமூர்த்தி பெயர் வந்ததால் அவர் வெற்றி பெற்றதாகத் தேர்தல் அதிகாரி அறிவித்தார். இதனால் தேமுதிக உறுப்பினரின் ஆதரவு இல்லாமலேயே வெற்றி பெற்றுள்ளார்.

திமுகவில் அதிக வருடங்கள் ஒன்றியச் செயலாளராகப் பதவி வகித்தவரான கிருஷ்ணமூர்த்திக்கு, திமுகவின் முப்பெரும் விழாவில் தந்தை பெரியார் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. உடல்நிலை சரியில்லை என்றாலும் நடக்க முடியாத நிலையிலும்கூட துணைக்கு யாரையாவது அழைத்துக் கொண்டு அப்பகுதியில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தவறாமல் கலந்துகொள்ளக் கூடியவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் தலைவராகியுள்ளது ஆலத்தூர் ஒன்றிய திமுகவினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிமுக தரப்பில் கே.எம்.எஸ்.சிவக்குமார், திமுக தரப்பில் இந்திரா தனலட்சுமி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். மறைமுகத் தேர்தலில் இரு வேட்பாளர்களுக்கு தலா 13 ஓட்டுகள் கிடைத்த நிலையில், குலுக்கல் முறையில் ஊராட்சி ஒன்றியத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அருகிலிருந்த சிறுமி ஒருவரை அழைத்து குலுக்கல் ஓட்டுப் பெட்டியில் இருந்த சீட்டை எடுத்தபோது அதில் அதிமுக வேட்பாளர் கே.எம்.எஸ்.சிவக்குமார் பெயர் இருந்தது. இதனால் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் திமுக, அதிமுக என இரு கட்சிகளுக்கும் தலா 14 வாக்குகள் கிடைத்தன. இதையடுத்து குலுக்கல் நடைமுறை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி திமுகவைச் சேர்ந்த பார்வதி சிவசங்கரன், அதிமுகவின் கலைச்செல்வி ஆகியோரின் பெயர் எழுதி குலுக்கல் முறையில் ஒரு சீட்டை எடுத்தனர். அதில் திமுகவின் பார்வதி சிவசங்கரன் வெற்றிபெற்றார்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் மொத்தம் 22 கவுன்சிலர்கள் உள்ளனர். அதில் 12 திமுகவும், 2 சிபிஎம், 1 காங்கிரஸ் என 15 இடங்களைப் பிடித்து திமுக கூட்டணி பெரும்பான்மை பெற்றிருந்தது. போட்டியின்றி திமுக வெற்றி பெற்றுவிடலாம் என்ற சூழலில், திமுகவின் ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா உறவினர் ரமேஷ் ஓர் அணியாகவும், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் காசி விஸ்வநாதன் ஓர் அணியாகவும் போட்டியிட்டனர். காசி விஸ்வநாதனுக்கு 5 அதிமுக கவுன்சிலர்களும் ஆதரவு கொடுத்தனர். இதனால் இரு தரப்புமே பதவியேற்ற நாளில் இருந்தே சமநிலையில் இருந்தனர்.

நேற்று நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் திமுக வேட்பாளர்கள் காசி விஸ்வநாதன், ரமேஷ் இருவரும் தலா 11 வாக்குகள் பெற்று சமநிலையில் இருந்தனர். தேர்தல் விதியின்படி குலுக்கல் முறையில் தேர்வு நடைபெற்றது. அதன்படி, ரமேஷ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.தலைவர் தேர்தலில் தோல்வியுற்ற காசி விஸ்வநாதன் துணைத் தலைவர் தேர்தலில் 12 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

தக்கலை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் தேர்தலில் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் தலா 5 வாக்குகள் கிடைத்ததால் குலுக்கல் முறையில் தேர்வு நடைபெற்றது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் அருள் ஆண்டனி வெற்றி பெற்றார். இதுபோலவே பல இடங்களிலும் குலுக்கல் முறையில் தேர்வு நடைபெற்று கடைசி நிமிடத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.

ஞாயிறு, 12 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon