மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 23 செப் 2020

அதிமுக வெற்றிக்கு உதவிய கிராஸ் வோட்டிங்!

அதிமுக வெற்றிக்கு உதவிய கிராஸ் வோட்டிங்!

மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், ஒன்றிய பெருந்தலைவர், ஒன்றிய துணைத் தலைவர் பதவியிடங்களுக்கான மறைமுகத் தேர்தல் நேற்று (ஜனவரி 11) நடைபெற்றது. அதில், அதிமுக கூட்டணி 14 மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியிடங்களையும், திமுக 12 இடங்களையும் கைப்பற்றின.

அதுபோலவே ஒன்றியத் தலைவர் பதவியிடங்களில் அதிமுக 140 இடங்களையும், திமுக 125 இடங்களையும் கைப்பற்றின.

கிராஸ் வோட்டிங் எனப்படும் மறைமுக வாக்களிப்பு உதவியதன் காரணமாகவே அதிமுக பல இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. இந்த முறையில் ஒரு உறுப்பினர் யாருக்கு வாக்கு செலுத்துகிறார் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். இந்த நிலையில் திமுகவினர் அதிமுகவுக்கு மாற்றி வாக்களித்ததன் காரணமாக 1 மாவட்ட ஊராட்சியையும், பல ஊராட்சி ஒன்றியங்களையும் அதிமுக கைப்பற்றியது. இதற்கு ஒரு தெளிவான உதாரணம் புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் தேர்தல்.

புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சியில் மொத்தமுள்ள 22 இடங்களில் திமுக கூட்டணி 13 இடங்களில் வெற்றிபெற்றது. நேற்று மறைமுக வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முன்பு வரை புதுக்கோட்ட மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியில் திமுக வேட்பாளர் எளிதாக வெற்றிபெறுவார் என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், தேர்தலில் திமுக வேட்பாளரை 9 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றியாளராகவே வெளியே வந்தவர் 8 உறுப்பினர்களின் ஆதரவைக் கொண்ட அதிமுகவின் ஜெயலட்சுமி. திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த 3 உறுப்பினர்கள் அதிமுகவுக்கு ஆதரவாக வாக்களித்ததால் ஜெயலட்சுமியால் வெற்றிபெற முடிந்தது.

இதுபோலவே ஒன்றிய பெருந்தலைவர், துணைத் தலைவர் தேர்தலிலும் பல இடங்களில் நடைபெற்றுள்ளது. வார்டுகளில் வெற்றிபெற்றது அடிப்படையிலான புள்ளிவிவரங்கள் படி திமுக கூடுதலாக 20 ஒன்றியங்களின் பதவிகளைக் கைப்பற்றியிருக்க வேண்டும். ஆனால், திமுகவை விட ஆளுங்கட்சியான அதிமுக 15 இடங்களில் கூடுதலாக வெற்றிபெற்றுள்ளது. அதிமுகவின் இந்த வளர்ச்சி எதிர்க்கட்சி உறுப்பினர்களை தொந்தரவு செய்து கிடைத்ததே என்று குறிப்பிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, “ஜனநாயகப் படுகொலை” என்று இதனை விமர்சித்தது.

மறைமுகத் தேர்தல் வாக்களிப்பு பிரச்சினை தொடர்பாக பேசிய அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன், இது திமுக உறுப்பினர்களின் நம்பிக்கையின்மையை பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டார். “அதிமுகவுக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் ஏமாற்றக்கூடிய நபர்கள் அல்ல. அதிமுகவுடன் கைகோர்ப்பது தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களின் நலனுக்கு உதவும் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர்” என்று குறிப்பிட்டார். இதுதவிர திமுக மற்றும் காங்கிரஸ் இடையே பதவியிடங்களை பங்கீட்டு கொள்வது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை, சில இடங்களில் அதிமுக பதவிக்கு வர உதவியது.

ஞாயிறு, 12 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon