மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 செப் 2020

742 பக்க அறிக்கை: ஐநாவிடம் கதறிய நித்யானந்தா

742 பக்க அறிக்கை:  ஐநாவிடம் கதறிய நித்யானந்தா

சர்ச்சைக்குப் பெயர் போன நித்யானந்தா தற்போது எங்கிருக்கிறார் என்பதுதான் அனைவரது கேள்வியாக இருக்கிறது. ஈகுவாடரில் தனித் தீவு வாங்கி கைலாசா என்று பெயரிட்டு வசித்து வருவதாக நித்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாலியல் வழக்கு குற்றவாளியான நித்தி எங்கிருக்கிறார் என்பதை டிசம்பர் 18ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று கர்நாடக நீதிமன்றம் அம்மாநில போலீஸுக்கு இறுதி கெடு விதித்துள்ளது.

ஒரு பக்கம் குஜராத் போலீஸ், ஒரு பக்கம் கர்நாடக போலீஸ் என நித்தியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆனால் என்ன நடந்தால் என்ன நம்ம வேலையைப் பார்ப்போம் என்ற வகையில் நித்யானந்தா, தினமும் ஒரு வீடியோவை தனது வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார்.

நான் ஒரு பொறம்போக்கு, நான் ஒரு பரதேசி எனத் தன்னைத் தானே விமர்சித்துக் கொள்ளும் நித்தி தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்று வீடியோ மூலம் சவால்விடுவது போல் தன்னை காண்பித்துக் கொள்கிறார். சமீபத்தில் கைலாசாவுக்கு, தனிநாடு அந்தஸ்து கேட்டு ஐக்கிய நாடுகள் அவையை நித்தி நாடியதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் 742 பக்க அறிக்கையை நித்தி ஐநாவுக்கு அனுப்பியது தெரியவந்துள்ளது.

அதில் பல்வேறு தகவல்கள் இடம் பெற்றிருந்தாலும், அவை அனைத்தும் நித்தி தன்னை பற்றி கூறி ஐநாவிடம் கதறியிருக்கிறார் என்பது தெரியவருகிறது. இந்த அறிக்கையை ரிபப்ளிக் டிவி வெளியிட்டுள்ளது.

’இந்து படுகொலை- சொல்லப்படாத கதை’ என்ற தலைப்பில் 742 பக்க அறிக்கையை ஐநாவுக்கு அனுப்பியுள்ளார் நித்யானந்தா.

அதில் ”கடந்த 10 ஆண்டுகளில் என் மீது 50 தடவைக்கும் மேல் கொலை முயற்சிகள் நடந்துள்ளன. இந்திய அரசால் தொடர்ந்து வன்முறை, வெறுப்பு, அவமானப்படுத்துதல் உள்ளிட்ட இடர்பாடுகளுக்கு ஆளானேன். சீடர்களைப் பிரிப்பது, குழப்பத்தை ஏற்படுத்துவது பலவீனப் படுத்துவது, பொய் பிரச்சாரம் செய்வது என பல வழிகளில் என்னைத் துன்புறுத்தினார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

ரமண மஹரிஷி, சாய் பாபா ஆகியோர் வழிகாட்டுதல்களைத் தான் பின்தொடருவதாகக் குறிப்பிட்டுள்ள நித்யானந்தா, இந்திய அரசு, காவல்துறை, ஊடகங்கள், ஆகியவை தன்னைப் பற்றி அவதூறு பரப்புகின்றனர். 2010ல் பிரபல நடிகையுடன் தான் இருப்பது போன்ற வீடியோ வெளியான போதிருந்தே தொடர்ந்து இவ்வாறு செய்து வருகின்றனர். அந்த வீடியோ உண்மையானதல்ல. உண்மைக்குப் புறம்பானது. என் மீது பாலியல் வழக்குகளையும் பொய்யாக தொடர்ந்தனர். போலீசார் என்னை கொடுமைப்படுத்தினர்” என்று தெரிவித்துள்ளார்.

நித்யானந்தா அனுப்பிய இந்த அறிக்கையில், சதானந்த கவுடா, தற்போதைய கர்நாடக முதல்வர் எடியூரப்பா என அரசியல்வாதிகள் பெயர்களும், கர்நாடக டிஜிபி சரண் ரெட்டி உள்ளிட்ட சில போலீஸ் அதிகாரிகளின் பெயர்களும் இருந்ததாக ரிபப்ளிக் டிவி தெரிவித்துள்ளது. பொய்யான குற்றச்சாட்டுகள் மூலம் கைது செய்து ஆசிரமத்தில் சோதனை நடத்தியதாகவும் நித்யானந்தா குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோதமாகத் தன்னை கைது செய்ததுடன், ஆசிரமத்திலிருந்த சன்னியாசிகள் மீதெல்லாம் தாக்குதல் நடத்தினர் என்று தனது அறிக்கையில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார் நித்யானந்தா.

வெள்ளி, 13 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon