மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 28 அக் 2020

எவ்வித உத்தரவும் பிறப்பிக்க முடியாது: சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம்!

எவ்வித உத்தரவும் பிறப்பிக்க முடியாது:  சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம்!

தற்போதைய சூழலில் சபரிமலை செல்லும் பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரிய வழக்கில் எந்தவித உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் நேற்று தெரிவித்துள்ளது.

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து பெண்கள் நல ஆர்வலர்கள் சபரிமலைக்குச் செல்ல திட்டமிட்டு வருகின்றனர். தற்போது மகர விளக்கு பூஜை சபரிமலையில் நடைபெற்று வரும் நிலையில், திருப்தி தேசாய், பாத்திமா ரெஹனா, பிந்து அம்மணி உள்ளிட்ட பெண்களும் ஐயப்பனை வழிபடச் சபரிமலைக்கு சென்றனர். அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு மறுக்கப்பட்டது.

கடந்த நவம்பர் 26ஆம் தேதி சபரிமலைக்கு வந்த பிந்து அம்மணி மீது இந்து அமைப்பைச் சேர்ந்த ஸ்ரீநாத் பத்மநாபன் மிளகாய்ப்பொடி ஸ்ப்ரே அடித்துத் தாக்குதல் நடத்தினார். இதனையடுத்து அவர் சபரிமலைக்குச் செல்ல பாதுகாப்பு அளிக்கக் கேரள அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நேற்று தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சபரிமலை செல்லும் பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது. வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டதால், இந்த அமர்வால் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. தற்போது புயலைக் கிளப்பும் விவகாரமாகச் சபரிமலை உள்ளது. நாங்கள் வன்முறையை விரும்பவில்லை.

பெண்களை அனுமதிக்கக்கூடாது என்று எந்த தடையும் தற்போது இல்லை. அவர்கள் விருப்பப்பட்டால் செல்லலாம், வழிபடலாம். அதற்கு எந்த தடையும் இல்லை” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வெள்ளி, 13 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon