மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 28 அக் 2020

நித்யானந்தா வழக்கு: போலீஸுக்கு இறுதி கெடு!

நித்யானந்தா வழக்கு: போலீஸுக்கு இறுதி கெடு!

பாலியல் தொல்லை, கடத்தல் வழக்கு, சிறுமிகளை வைத்து பணம் வசூல் செய்தல் என பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளான சர்ச்சை சாமியார் நித்யானந்தா எங்கிருக்கிறார் என்பது குறித்து வரும் டிசம்பர் 18ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று மாநில காவல் துறைக்குக் கர்நாடக உயர் நீதிமன்றம் இறுதி கெடு விதித்துள்ளது.

நித்யானந்தா மீது அவரது முன்னாள் சீடரான லெனின் கருப்பன், 2010ல் பாலியல் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கு விசாரணை ராம்நகர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் ஒரே ஒரு முறை மட்டும் விசாரணைக்காக ஆஜரான நித்யானந்தா அடுத்தடுத்த விசாரணைகளில் நீதிமன்றத்தில் ஆஜராவதில்லை. விசாரணைக்கு ஆஜராகாமல் இதுவரை 44 முறை வாய்தா வாங்கியுள்ளார்.

இந்நிலையில் ராம்நகர் நீதிமன்றத்தில் விசாரணை தொடர்ந்தால் நியாயம் கிடைக்காது, எனவே வழக்கு விசாரணையை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று தனியாக ஒரு மனுவைக் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார் லெனின் கருப்பன். அதில், ராம்நகர் நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்துவரும் நீதிபதி, நித்யானந்தாவுக்கு பிடியாணை அனுப்பாமல், சாட்சியங்களுக்கு மட்டுமே அனுப்பி வருகிறாா் என்று குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த மனுவை டிசம்பர் 9ஆம் தேதி விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம் வரும் 12ஆம் தேதிக்குள் நித்யானந்தா எங்கிருக்கிறார் என்பது குறித்துத் தெரிவிக்க வேண்டும் என்று கர்நாடக காவல்துறைக்கு உத்தரவிட்டது.

ஆனால் நேற்று கர்நாடக காவல்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இவ்வழக்கில் கடும் கண்டனத்தைப் பதிவு செய்த நீதிபதி ஜி.நரேந்தர், லெனின் கருப்பன் மனுவுக்குப் பதிலளிக்கப் பிறப்பித்த உத்தரவைக் கர்நாடக அரசு மதிக்காததால், விசாரணை நீதிமன்றத்தில் உள்ள வழக்கு தொடர்பான ஆவணங்களைக் கைப்பற்றுமாறு உயர் நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டார்.

மேலும் நித்யானந்தாவை தப்பிக்க விட்டுவிட்டு சாட்சியங்களிடம் மட்டும் விசாரணை நடத்தினால் என்ன பயன் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, நித்யானந்தா எங்கிருக்கிறார் என்று தெரியுமா என்று அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் கேட்டார். இதற்கு அரசுத் தரப்பு வழக்கறிஞர் , நித்யானந்தா விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து நிரந்தர விலக்கு பெற்றுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு மறுப்புத் தெரிவித்த லெனின் கருப்பன் தரப்பு வழக்கறிஞர், நித்யானந்தா நிரந்தர விலக்கு கேட்டதாகவும், ஆனால் அதற்கு இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை. அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறுவது பொய் என்றும் கூறியுள்ளார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி நித்யானந்தா நாட்டை விட்டுத் தப்பி ஓடுவதற்கா நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது? என அரசுத் தரப்புக்கு கேள்வி எழுப்பினார். இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் நித்யானந்தாவை கண்டறியும் முயற்சி நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

லெனின் கருப்பன் தரப்பில், குஜராத் உயர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் அளித்த தகவலின் படி, நித்யானந்தாவுக்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அப்படியானால் அவர், இந்தியாவில் இல்லை என்பது உறுதியாகிறது என்றார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வரும் டிசம்பர் 18ஆம் தேதிக்குள் நித்யானந்தா எங்கிருக்கிறார் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கர்நாடக அரசு மற்றும் காவல்துறைக்கு இறுதி கெடு விதித்து உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல், நித்யானந்தா மீதான வழக்குகளை ராம்நகர் நீதிமன்றம் விசாரிக்கவும் தடை விதித்துள்ளார். ஒரே ஒரு முறை ஆஜராகாத லெனின் கருப்பன் மீது விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையையும் நீதிபதி நிறுத்தி வைத்துள்ளார்.

வெள்ளி, 13 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon