மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 செப் 2020

அமித் ஷா சட்டம்: வன்முறை, துப்பாக்கிச் சூடு, இருவர் பலி!

அமித் ஷா சட்டம்: வன்முறை, துப்பாக்கிச் சூடு, இருவர் பலி!

குடியுரிமை சட்ட மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் நான்காவது நாளாகப் போராட்டம் நீடிக்கிறது.

மக்கள் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியதைக் கண்டித்து அசாம், திரிபுரா, மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இதனால் மூன்று மாநிலங்கள் முழுவதும் இணையதள சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் வன்முறை நடந்துவருவதால் இரு மாநிலங்களிலும் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கவுகாத்தி மாநகர கமிஷனர் தீபக் குமார், கூடுதல் டிஜிபி முன்னா பிரசாத் குப்தா உள்ளிட்ட அசாம் மாநில முக்கிய காவல் துறை அதிகாரிகள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்தியா வருகை தர இருந்த வங்கதேச வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல் மம்மூன் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது. போராட்டங்கள் அதிகமானதைத் தொடர்ந்து பொதுமக்கள் அமைதி காக்குமாறு அசாம் ஆளுநர் ஜெகதீஷ் முக்தி, முதல்வர் சர்பானந்தா சோனவால் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சர்பானந்தா சோனவால் வெளியிட்ட வீடியோவில், “அசாம் உடன்படிக்கையின் ஆறாவது பிரிவை அமல்படுத்துவதன் மூலம் நமது பாரம்பரிய கலாச்சாரம், மொழி, அரசியல் மற்றும் நில உரிமைகள் பாதுகாக்கப்படும் என்பதால் குடியுரிமை திருத்த மசோதா குறித்து கவலைப்படத் தேவையில்லை” என்று விளக்கம் அளித்துள்ளார்.

அசாம் தலைநகர் கவுகாத்தியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை எதிர்த்து, ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களைக் கலைக்கும் விதமாக வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். அதைத் தொடர்ந்து, நேற்று (டிசம்பர் 12) மாலை கவுகாத்தியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக கவுகாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறுகையில், “துப்பாக்கிச் சூட்டின்போதே ஒருவர் உயிரிழந்துவிட்டார். இன்னொருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்” என்றார். இதனால் மூன்று மாநிலம் முழுவதும் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

எதிர்க்கட்சிகள் போராட்டம்

மக்கள் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டம் ஆகியவற்றுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரி இயக்கங்கள் சார்பில் வரும் 19ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, மக்கள் குடியுரிமை மசோதாவுக்கு எதிராக திமுக சார்பில் வரும் 19ஆம் தேதி தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் போராட்டம் நடைபெறும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விசிக சார்பில் வரும் 14ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

வியாழன், 12 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon