மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 28 அக் 2020

ஐபேக்: எடப்பாடி எடுத்த சென்சிடிவ் முடிவு!

ஐபேக்: எடப்பாடி எடுத்த சென்சிடிவ் முடிவு!

கழக அரசியலும் கார்ப்பரேட் அரசியலும் - மினி தொடர் 9

பிரசாந்த் கிஷோர் சொன்னபடியே எடப்பாடி பழனிசாமி போட்ட கோட் சூட் சமூக தளங்களிலும் சரி, கிராமப்புறங்களிலும் சரி எடப்பாடியின் இமேஜை ஓரளவுக்கு உயர்த்தியது. இந்த வெளிநாட்டுப் பயணம் பல விமர்சனங்களையும் கிளப்பியது. ஆனால், படிப்பறிவில்லாதவர், விவசாயி என்ற முத்திரை குத்தப்பட்ட எடப்பாடி பழனிசாமி அமெரிக்காவிலும் லண்டனிலும் துபாயிலும் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் பற்றியெல்லாம் விவாதிக்கப்பட்டதைவிட, ‘டேய்...எடப்பாடிய கோட் சூட்ல பார்டா’ என்ற விவாதங்கள்தான் அதிகமாக இருந்தன. இதைத்தான் எடப்பாடியும் எதிர்பார்த்தார்.

இந்த அளவு வொர்க் அவுட் ஆகியிருந்த இருவருக்கு இடையேயும் ஏன் கோடு விழுந்தது? எப்போது கோடு விழுந்தது?

முதல்வர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமிக்கு உளவுத் துறை ரிப்போர்ட்டுகள் தினந்தோறும் கிடைக்கும். அதிகாரத்தின் பல்வேறு முனைகளில் இருந்தும் அவருக்குத் தகவல்கள் கிடைக்கும். இதையெல்லாம் தாண்டி அதிமுகவின் ஐடி விங் நிர்வாகிகளை அழைத்த எடப்பாடி பழனிசாமி, ‘நாம புதுசா பிரசாந்த் கிஷோர் அப்படிங்குறவரை வெச்சு சில விஷயங்கள் பண்ணிக்கிட்டிருக்கோமே... அதப் பத்தி என்ன நினைக்கிறீங்க. கட்சிக்காரங்க என்ன சொல்றாங்க?நல்லா விசாரிச்சு எனக்கு சொல்லுங்க’ என்று கேட்டிருக்கிறார்.

அதிமுக ஐடி விங் மாநில இணைச் செயலாளரான ராஜ் சத்யனை அழைத்த எடப்பாடி, இதை அவரிடம் ஸ்பெஷல் அசைன்மென்ட்டாகவே கொடுத்தார். எடப்பாடியின் மகன் மிதுனும் பிகே டீமின் வொர்க்கிங் ஸ்டைல் பற்றி தனியான தன் வட்டாரத்தின் மூலம் ஒரு விசாரணை நடத்தினார்.

சில நாட்கள் கழித்து முதல்வரைச் சந்தித்த ஐடி விங் நிர்வாகிகள் முக்கியமான பல விஷயங்களை அடுக்கியிருக்கிறார்கள்.

“பிகே எல்லா மாநிலங்களிலும் மிகச் சிறப்பாகவே வேலை செய்தவர். ஆனால், தமிழ்நாட்டில் அவருக்கு சில கள சவால்கள் உள்ளன. மற்ற மாநிலங்களைப் போல தமிழ்நாட்டில் அவரது பிரதிநிதிகளால் உண்மையான நிலவரத்தை உணர முடியுமா என்று தெரியவில்லை. முதல் காரணம் மொழி... இதுவரை அவர்கள் பணியாற்றிய மாநிலங்களில் இந்தி அல்லது இந்தியுடன் தொடர்புடைய மொழியே நடைமுறை மொழியாக இருந்தது. அதனால் பிகே டீமில் இருக்கும் பல வடஇந்தியர்களுக்கு ஈசியாக இருந்தது. ஆனால், தமிழ்நாட்டில் பிகே புதிய டீம் மெம்பர்களை போட வேண்டியுள்ளது.

இன்னொரு பக்கம் இதை சமாளிக்க, இந்தியன் பொலிடிக்கல் ஆக்‌ஷன் கமிட்டியில் சேர தன்னார்வலர்களை ஆன் லைன் மூலமாகவே அழைப்பு விடுப்பார்கள். இதில் தமிழகத்தில் இருந்து பலர் மெம்பர்கள் ஆகியிருக்கிறார்கள். அவர்களின் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களை ஆராய்ந்து அலசி அதிலிருந்து சில ரிப்போர்ட்டுகளை அவர்கள் தயாரிப்பதாகத் தெரிகிறது. அப்படி தயாரித்தால் அந்த ரிப்போர்ட் நமக்கு சரியானதாக இருக்காது. ஏனெனில் அதிமுகவின் பலமே கிராமங்களும், அடித்தட்டு மக்களும்தான். சமூக தளங்களில் உலவுபவர்களின் கருத்தை மட்டுமே வைத்து வியூகம் வகுக்க முடியாது. இந்த வேலையை எங்களிடம் கொடுத்தால் கட்சி ஈடுபாட்டோடு, உணர்வோடு இன்னும் அதிக அர்ப்பணிப்பு உணர்வோடு செய்வோமே... தவிர பிகேவுக்கு ஆகிற அளவு கோடிகளும் செலவாகாதே...” என்று முதல்வரிடம் கொட்டியிருக்கிறார்கள்.

எடப்பாடியும் இதை யோசித்துப் பார்த்தார். மீண்டும் தன் மகனுடன் ஆலோசித்தார். ஐடி விங் சொல்வதில் இருக்கும் நியாயத்தை உணர்ந்தார்.

“எங்கிருந்தோ வந்தவர்கள் பிசினஸ் ரீதியா பண்றதைவிட, நம்ம கட்சி ஆளுங்க நமக்காக பண்றதுதானே நல்லா இருக்கும்?” என்பதுதான் கடைசியாக எடப்பாடி இந்த விவகாரத்தில் எழுப்பிய கமென்ட்.

அதனால் முறைப்படி பிகேவிடம் நம் உறவு முறிந்துவிட்டது என்று சொல்ல வேண்டாம். அப்படியே விட்டுவிடுங்கள். அவர்களாகவே புரிந்து கொள்ளட்டும் என்பதுதான் எடப்பாடியின் உத்தரவு!

அப்படியே செய்யப்பட்டது. பிகே டீமின் அடுத்தடுத்த கேள்விக்கு அதிமுகவில் இருந்து உரிய ரெஸ்பான்ஸ் இல்லை. மெல்ல மெல்ல அதிமுகவுக்கும் ஐபேக்குக்குமான இடைவெளி அதிகரித்து, கடைசியில் ஒப்பந்தம் அறுந்து போனது.

இந்த நீண்ட பின்னணியில்தான் திமுக பக்கம் திரும்புகிறார் பிரசாந்த் கிஷோர்.

(கார்ப்பரேட் அரசியல் பயிலக் காத்திருங்கள்)

எடப்பாடி கெட்டப்பை மாற்றிய பிகே

வெள்ளி, 13 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon