மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 செப் 2020

அசாம் - இன்னொரு காஷ்மீர் ஆகிறதா?

அசாம் - இன்னொரு காஷ்மீர் ஆகிறதா?

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நேற்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டதால் சட்டமாகிறது. அசாம் மாநிலம் முழுவதும் இந்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில மக்கள் போராட்டங்களை நடத்தி வருவதால் டிசம்பர் 11, மாலை 7 மணி முதல் டிசம்பர் 12 மாலை 7 மணி வரை லக்கிம்பூர், தீமஜி, தீன்சுக்கியா, டிபருகா, சாரைடியோ, சிவசகர், ஜ்வரகாத், கோலாகாத், காமருப் நகர்புறம் ஆகிய பகுதிகளில் இணையம் மற்றும் தொலைத்தொடர்பு சேவையை நிறுத்தச் சொல்லி அம்மாநில ஆளுநர் மாளிகையிலிருந்து ஓர் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

சட்ட ஒழுங்கைச் சீர்குலைக்கும் விதமாக சமூக வலைதளங்களில் போராட்டக் காட்சிகள் மற்றும் வதந்திகள் பரவுவதால் இந்த நடவடிக்கை எடுப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கவுகாத்தி மற்றும் சில பகுதியில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அறிவிக்கப்பட்ட உடனேயே அசாம் மாநிலத்தில் மக்கள் போராடத் தொடங்கினர். கடந்த டிசம்பர் 9ஆம் தேதி மாலை 7 மணிக்கு குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து கவுகாத்தி பல்கலைக்கழக மாணவர்கள், காட்டன் பல்கலைக்கழக மாணவர்கள், டிபுருகா பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஜேபி சட்டக் கல்லூரி மாணவர்கள் இணைந்து மெழுகுவர்த்தி ஊர்வலம் நடத்தி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து போராட்டத்தைத் தொடங்கினர்.

மாணவர்கள் போராட்டம் வலுக்கவே, அசாம் மாநில காவல் துறையினர் மாணவர்கள் மீது கன்ணீர்புகைக் குண்டு வீசி கூட்டத்தைக் கலைக்க முயன்றனர். போராடிய மாணவர்கள் கலையாததால் அவர்கள் மீது தடியடி நடத்தவே, போராட்டம் கலவரமாக மாறியது. பதின்பருவத்தை தாண்டாத மாணவர்கள் வன்முறையைக் கையில் எடுத்துள்ளனர். வரும் ஞாயிறு அன்று இந்தியப் பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் ஷீன்ஷோ அபி ஆகியோர் சந்திப்பதற்கான அமைக்கப்பட்ட மேடை மற்றும் விளம்பர பதாகைகளை

அவர்கள் சேதப்படுத்தினர். இதனால் அசாம் மாநிலம் முழுவதுமே போராட்டக் களமாக இருக்கிறது. நேற்று மதியம் அசாம் சட்டமன்ற வளாகத்தில் பணியாற்றிய ஊழியர்களும் மக்களுடன் சேர்ந்து போராடத் தொடங்கி இருக்கின்றனர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர ஆயுதம் ஏந்திய ராணுவப் படையினரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியிருக்கிறது அசாம் மாநில அரசு.

சட்டப் பிரிவு 370 நீக்கத்துக்குப் பிறகு காஷ்மீரில் மக்கள் போராட்டத்தைக் கட்டுப்படுத்தக் கொண்டுவரப்பட்ட அரசு ஒடுக்குமுறை நடவடிக்கைகள் போலவே அசாம் மாநிலத்திலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முரளிகிருஷ்ணன் சின்னதுரை

வியாழன், 12 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon