மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 28 அக் 2020

நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா!

நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா!

கடும் எதிர்ப்புக்கும் மத்தியில் மாநிலங்களவையில் உள் துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நேற்று இரவு நிறைவேற்றப்பட்டது.

பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்கு வருபவர்களுக்குக் குடியுரிமை வழங்க இந்த மசோதா வழிவகை செய்கிறது. இந்த மசோதா, முஸ்லிம்களுக்கு அநீதி இழைப்பதாகவும், இலங்கை தமிழர்களை ஏன் இந்த மசோதாவில் சேர்க்கவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதா டிசம்பர் 9ஆம் தேதி மக்களவையில் நிறைவேறிய நிலையில், நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதங்கள் நடைபெற்றன. இதற்கு திமுக, மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.

இந்த மசோதாவால் முஸ்லிம்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டால் யார் பொறுப்பு என்ற கேள்விகளை பெரும்பாலான எம்.பி.க்கள் முன் வைத்தனர். மதிமுக எம்.பி வைகோ, “அரசமைப்புக்கு எதிரான இந்த மசோதாவைத் தூக்கி, வங்காள விரிகுடாவில் எறியுங்கள்” என்று கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

உள் துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், “காஷ்மீர் சட்டத்திருத்த நீக்க மசோதா, முத்தலாக் மசோதா போலவே இந்த மசோதாவும் முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல. இலங்கையிலிருந்து புலம்பெயரும் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டுவிட்டது. தற்போது மேலும் மூன்று நாடுகளுக்கான பிரச்சினைகளைக் களையச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இதையடுத்து இந்த மசோதாவைத் தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதற்கு 124 உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர், 99 பேர் ஆதரவு தெரிவித்தனர். இதனையடுத்து 8.15 மணியளவில் மசோதா மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்பைப் புறக்கணித்து சிவசேனா வெளிநடப்பு செய்தது. இறுதியாக மசோதாவுக்கு ஆதரவாக அதிமுக 11 உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 125 பேர் ஆதரவு தெரிவித்தனர். 105 உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். பின்னர் இம்மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.

இதையடுத்து குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்படவுள்ளது. மசோதா நிறைவேறியதைத் தொடர்ந்து இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, “இது இந்திய அரசியலமைப்பு வரலாற்றின் கறுப்பு நாள். நாட்டின் அடிப்படை கொள்கைகளுக்கே இந்த மசோதா சவால் விடுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகையில், “மசோதாவை ஆதரித்து சிறுபான்மையினர் மற்றும் ஈழத் தமிழர்களுக்கு மன்னிக்க முடியாத துரோகத்தைச் செய்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. பாஜகவின் கொள்கைதான் அதிமுகவின் கொள்கை என்றால், உங்கள் கட்சியின் பெயரில் பேரறிஞர் அண்ணாவின் பெயர் எதற்கு? இதுவரை 'ஊழல் ஆட்சி' - 'கொலைகார ஆட்சி' - 'கொள்ளைக்கார ஆட்சி' என்று நாம் சொல்லிக் கொண்டிருந்த எடப்பாடி ஆட்சி, இப்போது 'தமிழர்களுக்குத் துரோகம் செய்யும் ஆட்சியாக' மாறியிருக்கிறது” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஐபிஎஸ் அதிகாரி ராஜினாமா

இந்த மசோதா நிறைவேறியதற்கு எதிராக மும்பையைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி அப்துல் ரகுமான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்த மசோதாவை நிறைவேற்றியது என்பது சட்டத்தை மீறிய செயலாகும். இதனால் எனது பணியைத் தொடரப்போவதில்லை. இன்று முதல் அலுவலகத்துக்குச் செல்லப்போவதில்லை. எனது பணியை ராஜினாமா செய்கிறேன். என்னுடன் சேர்ந்து பணியாற்ற நினைத்தவர்களுக்கு வருத்தம் தெரிவிக்கிறேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கொடுக்க வேண்டும். சிறுபான்மையினருக்கு எதிரான இந்த மசோதாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் போராட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

வியாழன், 12 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon