மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 12 ஆக 2020

டிஜிட்டல் திண்ணை: கட்சிப் பதிவு - தினகரனை வாழ்த்திய அமைச்சர்கள்!

டிஜிட்டல் திண்ணை: கட்சிப் பதிவு - தினகரனை வாழ்த்திய அமைச்சர்கள்!

மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டது. வாட்ஸ்அப் ஆன்லைனில் வந்தது.

“டிடிவி தினகரனைப் பொதுச் செயலாளராகக் கொண்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தேர்தல் ஆணையத்தால் முறைப்படி பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஒரு கட்சியைப் பதிவு செய்வதற்கு வழக்கமாக எடுத்துக்கொள்ளப்படும் கால அளவைத் தாண்டி ஏழு மாத சட்டப் போராட்டத்துக்குப் பின்னர் பதிவாகியிருக்கிறது அமமுக. இந்தப் பதிவு வேறு யாரையும் விட அதிகமாக அதிர்ச்சியளித்திருப்பது அதிமுகவுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும்தான்.

சில நாட்கள் முன்புகூட செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘அமமுகவை நீங்கள்தான் கட்சி என்கிறீர்கள். அதெல்லாம் ஒரு கட்சியாகவே நான் கருதுவதில்லை’ என்றெல்லாம் ஏகத்துக்கும் பேசியிருந்தார். அதேநேரம் அமமுக தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்வதைத் தடுப்பதற்கான அத்தனை முயற்சிகளையும் செய்தார் எடப்பாடி. இதனால்தான் ஏழு மாத காலமாகப் பதிவு இழுபறியானது.அமமுகவைப் பதிவு செய்வதற்காக முதலில் பிரமாணப் பத்திரம் கொடுத்திருந்த புகழேந்தி அண்மையில் திடீரென எடப்பாடியைச் சந்தித்தார். அமமுக பதிவாகாது என்று பேட்டி கொடுத்தார். அமமுகவைப் பதிவு செய்யக் கூடாது என்று வழக்கும் தொடுத்தார். இது எல்லாவற்றுக்குப் பின்னால் எடப்பாடி இருக்கிறார் என, தினகரனுக்கு எதிராக எடப்பாடியின் அடுத்த சதி என்ற தலைப்பில் அக்டோபர் 30ஆம் தேதி தமிழின் முதல் மொபைல் தினசரி மின்னம்பலத்தில் டிஜிட்டல் திண்ணை பகுதியில் செய்தி வெளியாகியிருந்தது.

அதில் ஒரு சிறு பகுதியை மீண்டும் நினைவுகூர வேண்டியிருக்கிறது. ‘புகழேந்திக்கு, எடப்பாடி ஒரு முக்கியமான அசைன்மென்ட் கொடுத்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்றக் கட்சியைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்கு, தலைமைப் பொறுப்பில் உள்ள ஏழு பேர் உட்பட நூறு பேர் உறுதிமொழிப் பத்திரம் கொடுக்க வேண்டும். அந்தப் பத்திரத்தில், ‘நான் அமமுகவில் இன்ன பொறுப்பில் இருக்கிறேன், இத்தனை ஆண்டுக்காலமாக இருந்து வருகிறேன், வேறு கட்சியில் உறுப்பினராகவும் பொறுப்பிலும் இல்லை’ என்று உறுதிமொழி அளித்துக் கையெழுத்திட்டுக் கொடுக்க வேண்டும். அவ்வாறு உறுதிமொழிப் பத்திரம் கொடுத்த நூறு பேரில் தற்போது 15 பேர் வரை விலகி வெளியில் வந்துவிட்டார்கள். அதில் சிலர் மாற்றுக்கட்சிக்கும், தாய்க்கட்சியான அதிமுகவுக்கும் போய்விட்டார்கள். சிலர் ராஜினாமா செய்துவிட்டு எந்தக் கட்சிக்கும் போகாமல் நடுநிலையாக இருந்து வருகிறார்கள். இவர்களைத் தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்யச் சொன்னால் அமமுகவின் பதிவைத் தடுக்கலாம் என்று கணக்குப் போட்டார் எடப்பாடி பழனிசாமி.’

ஆனால், டிசம்பர் 6ஆம் தேதி தேர்தல் ஆணையம் அமமுகவின் பதிவை அங்கீகரித்து வெளியிட்டுள்ள ஆணையில், கட்சிப் பதிவுக்கு எதிராக வந்த ஆட்சேபனைகளுக்கு எந்த மெரிட் வேல்யூவும் இல்லை என்று தெரிவித்திருக்கிறது. இது எடப்பாடியை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது

மேலும், இந்திய அளவில் 300 கட்சிகள் பதிவு செய்ய விண்ணப்பங்கள் வரிசையில் காத்திருந்தபோது,திடீரென தேர்தல் ஆணையம் அமமுகவுக்கு முன்னுரிமை கொடுத்து இந்தப் பதிவைச் செய்துள்ளது என்பதும் எடப்பாடிக்கு அடுத்த அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. எடப்பாடியின் சந்தேகமெல்லாம் தேர்தல் ஆணையம் தானாக செய்யாதே, மத்திய பாஜக அரசின் கண்ணசைவின்றி இந்தப் பதிவு நடந்திருக்காதே என்பதுதான். ஆக, அமமுகவுக்கு பாஜக ஆதரவுக் கரம் நீட்டியுள்ளதாகக் கருதுகிறார்கள் அதிமுகவினர்,

எடப்பாடி அதிர்ச்சியடைந்திருக்கிறார் என்றால் தினகரன் இந்தப் பதிவுத் தகவலைக் கேட்டு செம குஷியாகியிருக்கிறார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் அரூரில், ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு டிசம்பர் 7ஆம் தேதி, இரவு தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வந்த தினகரன், மஞ்சவாடி கான்வாய் என்ற ஊரில் முன்னாள் அமைச்சரும் அமமுக துணைப் பொதுச்செயலாளருமான பழனியப்பனின் கெஸ்ட் ஹவுசில் தங்கினார். தர்மபுரி வந்ததிலிருந்தே வழக்கத்தை விட அதிக குஷியிலிருந்தார், அமமுக கட்சி பதிவாகிவிடும் என்ற நம்பிக்கையான தகவல், ஒரு மாதத்துக்கு முன்பே தினகரனுக்குத் தெரிந்திருந்தாலும், டிசம்பர் 6ஆம் தேதி, மத்திய தேர்தல் ஆணையம் அமமுகவைப் பதிவு செய்து, தமிழகத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய தகவலை உறுதிப்படுத்திய பிறகே தினகரன் நிம்மதிப்பெருமூச்சு விட்டிருக்கிறார்.

மெல்ல மெல்ல இந்தத் தகவல் அதிமுக கூடாரத்துக்கும் தெரியவர, கெஸ்ட் ஹவுசில் இருந்த தினகரனுக்கு அதிமுக அமைச்சர்கள் சிலர் தொடர்புகொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். சில போலீஸ் உயரதிகாரிகளும் தினகரனைத் தொடர்புகொண்டு, கட்சிப் பதிவு பெற்றதற்கு வாழ்த்துகளைச் சொல்லிவிட்டு குட்கா விசாரணை பற்றியும் சில தகவல்களை தினகரனிடம் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

அதிமுகவில் தற்போது எடப்பாடி பழனிசாமி மீது அமைச்சர்கள், எம்.எல்.ஏ,க்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்துள்ளதாகச் சொல்கிறார்கள். குறிப்பாக, வட மாவட்டங்களில் வன்னியர் மற்றும் தலித் சமூகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், கட்சிப் பொறுப்பாளர்கள், தென்மாவட்டங்களில் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த கட்சி பொறுப்பாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் எடப்பாடி மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். இடைத்தேர்தல் வெற்றிக்கு முன்பிருந்த எடப்பாடி வேறு, அதற்குப் பின்னால் இருக்கும் எடப்பாடி வேறு என்கிறார்கள் அவர்கள்.

ஏற்கெனவே தினகரனை வாக்கிங் போகும்போது சந்தித்த அமைச்சர் உட்பட சில அமைச்சர்கள் அமமுக பதிவுக்கு உடனடியாக தினகரனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள். தினகரனை ரகசியமாய் வாழ்த்தும் அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகமாகலாம்” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செவ்வாய், 10 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon