மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 செப் 2020

ஐஐடியில் இருந்து விலகும் மாணவர்கள்!

ஐஐடியில் இருந்து விலகும்  மாணவர்கள்!

நாட்டின் மிகச் சிறந்த கல்வி நிறுவனங்களாக ஐஐடி கருதப்படுகிறது. இங்கு பொறியியல் படிப்பில் சேர்ந்து படிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. இங்கு படிப்பதை மாணவர்கள் பெருமையாகக் கருதுகின்றனர். எனினும் படிப்பில் சேரும் மாணவர்கள் ஓராண்டிலோ அல்லது இரண்டாம் பருவத்திலோ படிப்பைப் பாதியில் நிறுத்துவது என்பதும் தொடர்ந்து வருகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் ஐஐடிகளில் படித்து வந்த 7248 மாணவர்கள் பி.டெக்(தகவல் தொழில்நுட்பம்) படிப்பிலிருந்து விலகியுள்ளனர். மனிதவள மேம்பாட்டுத் துறை, அண்மையில் மக்களவையில் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

ஐஐடியில் பி.டெக் படிப்பை 4 ஆண்டுகள் படிக்க வேண்டும். படிப்பில் பலவீனமாக இருக்கும் மாணவர்கள் பாதியிலேயே விலகி விடுகின்றனர். அவ்வாறு வெளியேறும் மாணவர்களுக்கு மாற்றுப்பாடமாக பிஎஸ்சி பிரிவில் கல்வியைத் தொடரவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி மனிதவள மேம்பாட்டுத் துறை தலைமையில் ஐஐஐடி குழு, 24 ஐஐஐடி நிறுவனங்களிலிருந்து மாணவர்களுக்கு வெளியேறும் விருப்பத்தை வழங்க ஒப்புதல் பெறுவது குறித்து விவாதித்துள்ளது.

ஆனால் அவ்வாறு மாணவர்களை வெளியேற்றும் முறையை கொண்டு வரமுடியாது என்று சில ஐஐஐடி நிறுவனங்கள் தெரிவித்து வருகின்றன.

இதுகுறித்து பெங்களூரு ஐஐஐடி இயக்குநர் எஸ். சடகோபன் கூறுகையில் 'நாங்கள் மாணவர்கள் வெளியேறும் முறையைக் கொண்டுவரமாட்டோம்., அது மாணவர்கள் மீது களங்கத்தை உண்டாக்கும்.படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு விலகுவதற்குப் பதிலாக ஆசிரியர்களை நம்புங்கள், மாணவர்களுக்குச் சிறந்த முறையில் பாடம் கற்பிக்க ஆசிரியர்கள் தங்களது வாழ்நாளில் பாதி காலங்களைச் செலவிடுகின்றனர். எனவே மாணவர்களுக்குச் சரியானது எது என்பது ஆசிரியர்களுக்குத் தெரியும். அனைத்து நிறுவனத்தில் படிக்கும் வெவ்வேறு மாணவர்களுக்கும் வெவ்வேறு தீர்வுகள் தேவைப்படுகிறது எனவே ஒரே வழிமுறை அனைவருக்கும் செயல்படாது' என்றார்.

ஹைதராபாத் ஐஐஐடி இயக்குநர் பிஜே. நாராயணனும், மாணவர்கள் வெளியேறும் முறையை நடைமுறைப்படுத்த மறுத்துள்ளார், 'ஐஐடி அதன் மாணவர்களை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. குறிப்பாக மாணவர்களின் செயல்திறன், முதலாம் ஆண்டு மாணவர்களை கூர்ந்து கண்காணித்து வருகிறோம். முதலாம் ஆண்டு நன்றாகப் படிக்கும் மாணவர்கள் பின் வரும் காலகட்டத்திலும் நன்றாகப் படித்துச் சமாளித்து விடுகின்றனர். முதல் பருவத்தேர்வு முடிந்தவுடன் மாணவர்களுக்குக் கல்விக்கான உதவிகளைத் தருகிறோம். இதன்மூலம் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுவிடுகின்றனர். மேலும், படிப்பில் பலவீனமாக இருக்கும் சில மாணவர்களுக்கு இந்த வெளியேறும் நடைமுறை உதவும் என்றார்.

புனே ஐஐடியின் பதிவாளர் எஸ்.என்.சபலியும் இவரது கருத்தை ஆதரித்துள்ளார்.

' தேர்வில் தேர்ச்சி பெற மாணவர்கள் வழிநடத்தப்படுகிறார்கள் மேலும் கண்காணிக்கப் படுகின்றனர். எனவே வெளியேறும் நடைமுறையை செயல்படுத்த மாட்டோம்' என்றார் எஸ்.என்.சபலி. முதுகலை பட்ட படிப்பு மாணவர்கள் பாதியிலேயே படிப்பை விட்டுவிடுவதற்கு, நல்ல வேலை வாய்ப்பு கிடைக்காததே காரணம் என மனிதவள மேம்பாட்டு துறை தெரிவித்துள்ளது

திங்கள், 9 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon