Gசீமானின் என்கவுன்டர் ஆசை!

public

ஐதராபாத் என்கவுன்டருக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

ஐதராபாத் சம்ஷாபாத்தைச் சேர்ந்த கால்நடை பெண் மருத்துவர் கடந்த 27ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாக எரித்து கொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட அதே இடத்தில் வைத்து இன்று (டிசம்பர் 6) அதிகாலை 6 பேரும் போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்டனர். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னையிலுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான ராவணன் குடிலில் அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய சீமானிடம், ஐதராபாத் சம்பவம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு “4 பேர் என்கவுன்டர் செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது. எந்தக் குற்றத்திற்கும் மரணம் தண்டனையாக இருக்கக் கூடாது என்று போராடுபவர்கள்தான் நாங்கள். எனினும் பெண்களை போதைப் பொருளாகக் கருதி வன்புணர்வு செய்பவனுக்கு மரணத்தைத் தவிர வேறு எதுவும் தண்டனையாக இருக்க முடியாது. பொள்ளாச்சி பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு 90 நாட்களில் குண்டர் சட்டத்தை ரத்துசெய்து வெளியில் விட்டது மிகப்பெரிய கொடுமை. ஐதராபாத் போல எந்த இடத்தில் வன்புணர்வு செய்தானோ அதே இடத்தில் வைத்து சுட்டால்தான் அச்சம் பரவும்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, “மரணம் ஒன்றுதான் இவர்களை ஒழுங்குடன் நடக்க அறிவுறுத்திக்கொண்டு இருக்கும். இல்லையெனில், சிறையில் மக்கள் வரிப் பணத்தில் உணவு, உடை என சொகுசாக வாழ்வதுதான் நடைபெறும். 90 நாட்களில் சிறையிலிருந்து வெளியே வந்து என்ன குற்றம் வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைதான் இருக்கும். தண்டனைகள் இல்லையெனில் குற்றச்செயல்கள் குறையாது” என்று சொன்ன சீமான்,

“தெலங்கானா அரசின் இந்த முடிவை நான் வரவேற்கிறேன். நாங்கள் ஆட்சிக்கு வந்தாலும் இதைத்தான் செய்வோம். பாலியல் குற்றத்திற்கு தண்டனை மரணம்தான். 6 வயது குழந்தையை வன்புணர்ந்து கொலை செய்பவனை தண்டிக்காமல் சிறையில் அடைத்து கொண்டாடுவதை விட கொடுமை எதுவுமில்லை. தெலங்கானாவை நாம் முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *