மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 15 ஜன 2021

எனக்கெதிராக ஒரு குற்றச்சாட்டுக்கூட பதிவு செய்யப்படவில்லை: சிதம்பரம்

எனக்கெதிராக ஒரு குற்றச்சாட்டுக்கூட பதிவு செய்யப்படவில்லை: சிதம்பரம்

106 நாட்களுக்குப் பிறகு டெல்லி திகார் சிறையில் இருந்து, ஜாமீனில் விடுவிக்கப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், நேற்று (டிசம்பர் 4) இரவு விடுதலையானார். வீடு திரும்பும் முன் நேராக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின், ஜன்பாத் இல்லத்துக்குச் சென்றார்.

நேற்று மாலை 8.13 மணியளவில், சிறையிலிருந்து வெளியே வந்த அவரை, அங்கு குவிந்திருந்த காங்கிரசார் உற்சாகத்துடன் வரவேற்றனர். அப்போது அவர் முழுக்கை வெள்ளை சட்டை மற்றும் வேட்டி அணிந்திருந்தார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “உச்ச நீதிமன்றம் ஜாமீன் உத்தரவைப் பிறப்பித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். 106 நாட்களுக்குப் பிறகு சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பதில் மகிழ்ச்சி. வழக்கு குறித்து என்னால் கருத்து தெரிவிக்க முடியாது. உச்ச நீதிமன்ற உத்தரவுக்குக் கீழ்ப்படிகிறேன். உண்மை என்னவென்றால், 106 நாட்கள் நான் சிறையில், விசாரணையில் இருந்தேன். இருப்பினும் எனக்கெதிராக ஒரு குற்றச்சாட்டைக்கூட விசாரணை அதிகாரிகளால் சுமத்த முடியவில்லை . இதைப்பற்றி நான் நாளை (இன்று) பேசுகிறேன்” எனச் சுருக்கமாகச் செய்தியாளர்கள் சந்திப்பை முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டார் சிதம்பரம்.

பின்னர் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி வீட்டுக்குச் சென்றுள்ளார் அங்கு அவர் 20 நிமிடங்கள் வரை இருந்துள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து 9.20 மணியளவில் ஜோர்பாக்கில் உள்ள தனது இல்லத்துக்கு வந்தடைந்தார். அவரது வருகைக்காக அங்கு கூடியிருந்த அவரது பணியாளர்கள், முன்னாள் நிதியமைச்சரின் வருகைக்காகக் காத்திருப்பதாகவும், அவருக்காகத் தென்னிந்திய உணவு வகையான சாதம் மற்றும் சிக்கனும் சமைத்து வைத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

சிதம்பரம் விடுதலையானது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, 106 நாட்கள் சிதம்பரம் சிறையிலிருந்தது என்பது பழிவாங்கும் அரசியல் என பாஜக மீது குற்றம்சாட்டியுள்ளார். உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளதை வரவேற்பதாகவும், தான் குற்றமற்றவர் என்பதை சிதம்பரம் நிரூபிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், இது அரசியல் பழிவாங்கும் செயல் அல்ல. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சிதம்பரம் உள்துறை அமைச்சராகப் பதவி வகித்தபோது, பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் என் மீதும் பொய் வழக்குகளைத் தொடுத்தார். இந்த வழக்குகளில் நாங்கள் நிரபராதி என்பதை பின்பு நிரூபித்தோம் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரத்துக்கு சிபிஐ வழக்கில் ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் நேற்று அமலாக்கத் துறை வழக்கிலும் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கு பற்றி வாய் திறக்கக் கூடாது: சிதம்பரம் ஜாமீனில் விடுதலை!

வியாழன், 5 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon