மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 4 டிச 2020

தர்பார் இசை வெளியீட்டில் என்ன நடக்கப் போகிறது?

தர்பார் இசை வெளியீட்டில் என்ன நடக்கப் போகிறது?

தர்பார் திரைப்படப் பாடல்கள் வெளியீடு வருகிற டிசம்பர் 7ஆம் தேதி. சென்னையில் நடைபெறுகிறது. நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் திரைப்பட பிரபலங்கள் பலரும் கலந்துகொள்கின்றனர். கால இடைவெளி அதிகம் கொடுக்காமல், மூன்று நாட்களுக்கு முன்பாக அறிவிப்பு வெளியாகியிருப்பதால் நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனையைப் பற்றி ஏற்கெனவே தேடத் தொடங்கிவிட்டனர் ரசிகர்கள்.

ரஜினியின் பேச்சுக்கென எப்போதும் தனி மவுசு இருக்கும். ஆனால், தற்போதைய அரசியல் சூழ்நிலையில், அதில் அவர் பங்கெடுக்கப் போவதாக அறிவித்திருப்பதாலும் ‘தர்பார்’ படப் பாடல் வெளியீட்டு விழா மேடை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

‘சும்மா கிழி’ என்ற பாடல் ஏற்கெனவே வெளியாகி வரவேற்பையும், விமர்சனத்தையும் ஒரு சேர பெற்றிருக்கும் நிலையில், மற்ற பாடல்கள் பற்றிய தகவல்களும் வெளியாகியுள்ளன. தலைவர் தீம், சும்மா கிழி, கண்ணழகி, Show The Darbar, நீதி ஆகிய ஐந்து பாடல்கள் மட்டுமே திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளன. அவற்றில் கண்ணழகி மட்டுமே மெலடி பாடல். தலைவர் தீம் மற்றும் Show The Darbar ஆகியவை தீம் பாடல்களாக இருக்க, சும்மா கிழி மற்றும் நீதி ஆகிய பாடல்கள் படத்துடன் நகரக்கூடியவையாக இருக்குமென பேசப்படுகிறது.

ரஜினியின் பேச்சு, தர்பார் பாடல்கள், முருகதாஸ் காட்டப்போகும் டிரெய்லர் என இந்த நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்பு அதிகமாகியிருப்பதால் டிக்கெட் விலையையும் அதிகமாக வைத்து விற்பதற்கான வேலைகள் தொடங்கியிருக்கின்றன. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விஜய்யின் பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் அதிக விலைக்கு டிக்கெட் விற்றதும், உள்ளே சென்ற ரசிகர்கள் நிகழ்ச்சியைப் பார்க்க முடியாமல் சிரமத்துடன் வெளியேறியதும் சினிமா ரசிகர்களிடம் பசுமையாய் நினைவிருக்கும் நிலையில் இங்கு என்ன நடக்கப்போகிறது எனப் பார்ப்போம்.

வியாழன், 5 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon