மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

ஜெ. நினைவு நாள்: அதிமுகவை மீட்க தினகரன் எடுக்கும் சபதம்!

ஜெ. நினைவு நாள்: அதிமுகவை மீட்க தினகரன் எடுக்கும் சபதம்!

ஜெயலலிதா நினைவு நாளை முன்னிட்டு அமமுக தொண்டர்களுக்கு தினகரன் கடிதம் எழுதியுள்ளார்.

உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சிகிச்சை பலனளிக்காமல் 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்தார். ஜெயலலிதா மறைந்து மூன்று ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில், அவரது நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படவுள்ளது.

இதனையடுத்து அதிமுக சார்பில் நாளை காலை 10 மணியளவில் சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள அண்ணா சிலையிலிருந்து, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் ஊர்வலமாகப் புறப்பட்டு, ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்த உள்ளார்கள். இதைத் தொடர்ந்து காலை 10.30 மணியளவில் அமமுக சார்பிலும் அமைதி ஊர்வலம் நடைபெற இருக்கிறது.

ஜெயலலிதா நினைவு நாளை முன்னிட்டு அமமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் எழுதியுள்ள மடலில், “ஜெயலலிதாவின் இடத்தை நாங்கள் நிரப்பிவிட்டோம் என்று சிறுபிள்ளைத்தனமாகச் சொல்லிக்கொள்ளும் சிலர், அதிமுகவை அடிமை இயக்கமாக மாற்றியதுடன், ஜெயலலிதா காத்திட்ட மக்கள் நலன்களையும் தங்கள் சொந்த நலனுக்காக காவு கொடுத்துவிட்டு மக்கள் முன்னால் அம்பலப்பட்டு நிற்கிறார்கள்” என்று விமர்சித்துள்ளார்.

தங்களை ஆட்சியில் அமரவைத்த சசிகலாவை ஏளனம் செய்வதாக நினைத்துக்கொண்டு, அவர் மீண்டும் அதிமுகவில் சேர விரும்பினால் பரிசீலிப்போம். அவர் வந்தால் சேர்க்க மாட்டோம் என்றெல்லாம் அர்த்தமற்ற அறிக்கை விடுகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ள தினகரன், “உண்மையில் அப்படி எந்த முயற்சியோ, முன்னெடுப்போ நடக்கவும் இல்லை. அதற்கு அவசியமும் இல்லை. இதை நீங்களும் நன்றாக அறிவீர்கள்” என்றும் விளக்கியுள்ளார்.

அமமுகவைச் சட்டப்படி பதிவு செய்வதற்கு முடிந்தவரை முட்டுக்கட்டை போட்டுப்பார்த்தார்கள். ஆனால், அதையெல்லாம் தவிடுபொடியாக்கி அமமுக சட்டப்படி பதிவு பெற்ற செய்தி எந்த நேரமும் வெளியாக இருக்கிறது என்ற தகவலைத் தெரிவித்ததோடு, இடைத் தேர்தல் வெற்றியைத் தமிழகம் முழுக்க அதிமுகவுக்கு செல்வாக்கின் அடையாளம் என்று பிதற்றினார்கள். இவர்களுக்கு நிஜமாகவே அப்படி செல்வாக்கு இருக்குமானால், உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள இவ்வளவு பயப்படுவது ஏன் என்று கேள்வியும் எழுப்பியுள்ளார் தினகரன்.

அமமுகவுக்குப் பொதுவான சின்னம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலும் சுயேச்சை சின்னத்திலாவது போட்டியிடுவோம் என்றும் கூறியுள்ள அவர், “சுயநலம் ஒன்றையே குறிக்கோளாகக்கொண்டு, ஆட்சி அதிகாரத்தைத் தொடர நினைக்கும் இந்தத் துரோகிகளை வீழ்த்தும் சிந்தனையோடு ஜெயலலிதாவின் நினைவு நாளில் நினைவிடம் சேர்வோம். அதிமுகவைத் துரோகிகளிடம் இருந்து மீட்டெடுக்கவும், ஜெயலலிதா காலத்தில் தமிழகம் பெற்றிருந்த உரிமைகளையும், பெருமைகளையும் திரும்பப்பெறும் வகையில் புதிய ஆட்சியை அமமுக சார்பில் அமைத்திடவும் அங்கே சபதமேற்போம்” என்றும் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

புதன், 4 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon