மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 6 ஜுன் 2020

குட்கா: டி.கே.ராஜேந்திரன் அமலாக்கத்துறை முன் ஆஜர் ஆகாதது ஏன்?

குட்கா: டி.கே.ராஜேந்திரன் அமலாக்கத்துறை முன் ஆஜர் ஆகாதது ஏன்?

குட்கா ஊழல் விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் டிசம்பர் 2 ஆம் தேதி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் அவர் ஆஜராகவில்லை. தான் ஆஜராக கூடுதல் கால அவகாசம் கேட்டிருப்பதாக அமலாக்கத்துறை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

தமிழகத்தை உலுக்கிய குட்கா ஊழலில் சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருக்கிறது. விசாரணையைத் தொடங்கிய சிபிஐ, குட்கா விவகாரத்தில் தொடர்புடைய மத்திய கலால் துறை அதிகாரிகள், தமிழக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் தனிநபர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது. சிபிஐ விசாரணை ஒருபக்கம் செல்ல இன்னொரு பக்கம் குட்கா விவகாரத்தில் சட்டவிரோதமாக பண பரிவர்த்தனை நடந்ததாக சில அதிகாரிகள் மீது அமலாக்கத் துறை பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.

இதன் அடிப்படையில்தான் கடந்த நவம்பர் 24 ஆம் தேதி தமிழகத்தின் முன்னாள் டிஜிபியான டி.கே.ராஜேந்திரன், கூடுதல் காவல் ஆணையர் தினகரன் ஆகியோருக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். டி.கே. ராஜேந்திரன் டிசம்பர் 2 ஆம் தேதியும், தினகரன் டிசம்பர் 3 ஆம் தேதியும் ஆஜராக வேண்டும் என்று அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் இந்த இரு அதிகாரிகளும் மேற்குறிப்பிட்ட தினங்களில் அமலாக்கத்துறை முன் ஆஜராகவில்லை என்ற தகவல் இன்று வெளியாகியிருக்கிறது. தங்களுக்கு அனுப்பப்பட்ட சம்மனின் படி ஆஜராவதில் இருந்து சொந்தக் காரணங்களுக்காக கால அவகாசம் கேட்டு அந்த அதிகாரிகள் சட்ட ரீதியாக அமலாக்கத் துறைக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள் என்றும் தெரியவருகிறது.

குட்கா ஊழல் விவகாரம் மூலமாக தமிழகத்தின் ஆளுங்கட்சியான அதிமுகவை உலுக்கிப் பார்க்க முடிவு செய்துவிட்டார், உள்துறை அமைச்சரும் பாஜக தலைவருமான அமித் ஷா. “உள்துறை அமைச்சரும் பாஜக தலைவருமான அமித்ஷாவின் அடுத்த பார்வை தமிழ்நாட்டின் மீது விழுந்திருக்கிறது. அதன் முதல் அறிகுறிதான் குட்கா விஷயத்தில் மத்திய அரசு செயல்படத் தொடங்கியிருக்கிறது” என்பதை குட்கா மூலம் தமிழகத்தைக் குறிவைக்கும் அமித் ஷா என்ற தலைப்பில் நவம்பர் 25 ஆம் தேதியிட்ட மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரியில் பதிவு செய்திருந்தோம்.

இந்த நிலையில், “அமலாக்கத்துறை சார்பில் அனுப்பப்படும் மூன்று சம்மன்களை பொருட்படுத்தத் தேவையில்லை. மூன்று சம்மன்களுக்கு மேல் ஆஜராகவில்லை என்றால்தான் அமலாக்கத்துறையால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியும். எனவே அமலாக்கத்துறையின் முன் ஆஜராவதை தாமதப்படுத்துங்கள்.இப்போதே ஆஜராகிவிட்டால் அது பல பேருக்கு சிக்கலை ஏற்படுத்தும்” என்று டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தமிழக ஆளுங்கட்சி விஐபிகளிடம் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும், அதன் காரணமாகவே இந்த அவகாசக் கடிதம் என்றும் ஐபிஎஸ் வட்டாரங்களில் பேசுகிறார்கள்.

புதன், 4 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon