மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

சோனியா சந்திப்பு, மெடிக்கல் செக்கப்: சிதம்பரத்தின் அடுத்த கட்ட திட்டம்!

சோனியா சந்திப்பு, மெடிக்கல் செக்கப்: சிதம்பரத்தின் அடுத்த கட்ட திட்டம்!

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் திகார் சிறையில் 106 நாட்களாக இருக்கும் நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு இன்று (டிசம்பர் 4) உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவில் சொல்லப்பட்டுள்ள பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்து விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைத்து, சிதம்பரத்தை இன்றே வெளியே கொண்டுவர சட்ட ரீதியான ஏற்பாடுகளில் காலையில் இருந்தே தீவிரமாக ஈடுபட்டனர் சிதம்பரத்தின் வழக்கறிஞர்கள்.

இந்நிலையில் இன்று மாலை பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த சிதம்பரத்தின் மனைவியும் வழக்கறிஞருமான நளினி சிதம்பரம், “ அவருக்கு ஜாமீன் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்று மாலைக்குள் அவரை சிறையில் இருந்து வெளியே கொண்டுவர முயற்சிக்கிறோம். முதலில் அவரது உடல் நலனை சிறந்த மருத்துவர்கள் மூலம் பரிசோதனை செய்ய வேண்டும். உடல் நலனைப் பொறுத்தே அவர் நாடாளுமன்றத்துக்கு வருவது பற்றி சொல்ல முடியும்” என்று கூறியுள்ளார்.

இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், “என் தந்தை நாளை காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்துக்கு வருவார்” என்று கூறியிருந்தார். இன்று மாலை மீண்டும் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “சிறையில் இருந்து வந்ததும் முதல் வேலையாக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை ப.சிதம்பரம் சந்திப்பார்” என்று குறிப்பிட்டிருக்கிறார்,.

சிறையில் இருந்து வெளியே வரும் சிதம்பரத்தை வரவேற்பதற்காக தமிழகத்திலிருந்து காங்கிரஸ் தொண்டர்கள், நிர்வாகிகள் நூற்றுக்கணக்கில் டெல்லியில் குவிந்திருக்கிறார்கள். திகார் சிறை வாசலில் காங்கிரஸ் கொடிகளோடு இன்று பிற்பகல் முதலே அவர்கள் காத்திருக்கத் தொடங்கிவிட்டார்கள்.

இதனிடையே, சிதம்பரத்தின் விடுதலை குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, “ காங்கிரஸ் மூத்த தலைவர் திரு. ப.சிதம்பரம் அவர்களுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

புதன், 4 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon