மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

பெண்கள் புகாருக்கு எல்லை வரம்பின்றி நடவடிக்கை எடுக்க உத்தரவு!

பெண்கள் புகாருக்கு எல்லை வரம்பின்றி நடவடிக்கை எடுக்க உத்தரவு!

2012ல் நிகழ்த்தப்பட்ட நிர்பயா சம்பவத்தை தொடர்ந்து, 2019 நவம்பர் 27ஆம் தேதி ஹைதராபாத் பெண் மருத்துவர், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, எரித்து கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு எங்குள்ளது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் எனப் பெண்கள் அதிகம் பணிபுரியும் பகுதியில் பெண்கள் பாதுகாப்பு எப்படி இருக்கிறது என சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் டைம்ஸ் ஆப் இந்தியா ஊடகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின் படி, இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் மற்ற நகரங்களைக் காட்டிலும் சென்னையில் குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

மற்ற நகரங்களைக் காட்டிலும் சென்னையில் குறைவு என்றாலும், ஆண்டுக்கு ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. 2016ல் 533ஆக இருந்த குற்ற வழக்குகள் 2017ல், 642ஆக அதிகரித்துள்ளது என்று இந்த புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் தமிழகத்துக்கு மத்திய அரசு நிர்பயா நிதியாக ரூ.190.68 கோடி வழங்கியுள்ளது. இதில், 6 கோடி ரூபாய் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்புக்கான அவசர அழைப்பு எண் 181 என்ற திட்டம் இந்த நிதி மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனினும் 70,000க்கும் குறைவான அழைப்புகளே இதன் மூலம் வந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கூடுதலான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதே பெண்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்நிலையில் தமிழக டிஜிபி திரிபாதி அனைத்து மாவட்ட காவல் துறையினருக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். கடந்த 2ஆம் தேதி அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், உதவி கோரி வரும் அழைப்புகள் குறுஞ்செய்திகள் தகவல்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் சரக எல்லை, நடைமுறை சிக்கல்கள் போன்ற வரைமுறைகளைத் தாண்டி தாமதமின்றி உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். காவலன் கைப்பேசி செயலியைப் பொதுமக்கள் மத்தியிலும், குறிப்பாகப் பெண்கள், சிறார்கள், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் உள்ளிட்டோரிடம் பிரபலப்படுத்த வேண்டும். இந்த செயலி குறித்து பொது இடங்களில் விளம்பரம் செய்ய வேண்டும். ஆபத்து ஏற்படும் போது உடனே போலீசாரை அழைக்கும் வகையில் ஊக்கப்படுத்த வேண்டும். மக்கள் பாதுகாப்பை உறுதி செய்வதில் தமிழகம் நாட்டிற்கே முன்மாதிரி மாநிலமாகத் திகழ வேண்டும். ஒவ்வொரு மாநகர காவல் ஆணையரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும், சரக காவல் துணைத் தலைவர் மற்றும் மண்டல காவல்துறைத் தலைவர் ஆகியோரின் கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதல்களின்படி, ‘காவலன் செயலி'யின் பயன்பாட்டை ஊக்குவிக்க தாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் அதனால் விளைந்த பயன்கள் குறித்து வருகிற டிசம்பர் 10ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத் கொடூர சம்பவத்தின் போது, அங்குள்ள போலீசார் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை, தங்களது வரம்பைக் காரணம் காட்டி தாமதப்படுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்ட நிலையில், தமிழக டிஜிபி, வரம்பைக் காரணம் காட்டி நடவடிக்கை எடுப்பதில் தாமதப்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.

புதன், 4 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon