மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 6 ஜுன் 2020

டான் பெயரில் ஃபோல்டு ஸ்மார்ட்போன்!

டான் பெயரில் ஃபோல்டு ஸ்மார்ட்போன்!

கடத்தல் மன்னன், நார்கோ டெரரிஸ்ட், அரசியல்வாதி ஆகிய பல வேலைகளை ஒன்றாகச் செய்ததில் இடம்பெற்ற ‘எஸ்கோபார்’ என்ற பெயரை உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிளை வீழ்த்திய பெயராக மாற்றுகிறேன் என கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறார் ராபர்டோ எஸ்கோபார்.

உலகப் புகழ்பெற்ற கடத்தல் மன்னன், போதை மருந்து உலகின் தீவிரவாதி, டான் என்றெல்லாம் அழைக்கப்பட்ட கொலம்பியாவின் வரலாற்றிலிருந்து அழிக்கமுடியாத பாப்லோ எஸ்கோபாரின் தம்பி தான் இந்த ராபர்டோ எஸ்கோபார்.

பாப்லோ உயிரோடு இருந்தபோதே குடும்பத் தொழில்களை விட்டுவிட்டு வெளியேறிவிட்டவர் ராபர்டோ. அதன்பிறகு 1993இல் பாப்லோ எஸ்கோபார் போலீஸால் சுட்டுக்கொல்லப்பட்டு, அவரது சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டபோதும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் தப்பித்தார் ராபர்டோ. பாப்லோ இறந்து இத்தனை வருடங்கள் ஆகிவிட்ட பிறகும் தங்களது குடும்பப் பெயருக்கு ஏற்பட்டுள்ள அழுக்கைத் துடைக்கிறேன் என்று இவர் குறிவைத்திருப்பது ஆப்பிள் நிறுவனத்தைத் தான்.

“ஆப்பிள் நிறுவனம் மக்களை ஏமாற்றுகிறது. அவர்கள் விற்கும் பொருளுக்கு ஏற்ற பணத்தைவிட அதிகம் வாங்குகிறார்கள். நியாயமாக அவர்கள் மீது வழக்கு தொடர வேண்டும்” என்று ராபர்டோ தொடர்ந்து கூறிவந்தார். ‘ஆப்பிள் வாங்கும் பணத்துக்குப் பொருளைக் கொடுக்கவில்லை என்றால், நீங்கள் அந்த மாதிரி ஒரு பொருளைக் கொடுக்கலாமே’ என பல்வேறு விமர்சனங்கள் ராபர்டோவை தாக்கின. இதன் விளைவாய் அவருக்கு உதித்தது தான் ‘பாப்லோ எஸ்கோபார் ஃபோல்டு 1’ (Pablo ESCOBAR FOLD 1).

பாப்லோ ஸ்மார்ட்போன் நிறுவனத்தை உருவாக்கி, அதை தனது எஸ்கோபார் நிறுவனத்துடன் இணைத்து ‘பாப்லோ எஸ்கோபார் ஃபோல்டு 1’ என்ற மடக்கக்கூடிய ஸ்மார்ட்போனை உருவாக்கி வெளியிட்டிருக்கிறார் ராபர்டோ. சாம்சங் நிறுவனத்தின் ஃபோல்டு ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக இந்த ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட் வெளியிடப்பட்டிருக்கலாம் என்று கருதப்பட்டபோது தான், ‘என்னுடைய டார்கெட் ஆப்பிள்’ என்று அறிவித்தார் ராபர்டோ.

ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு விற்கப்படும் சாம்சங் ஃபோல்டு ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடும்போது, ராபர்டோவின் மாடலின் விலை வெறும் 25,000 ரூபாய்தான். ஆனால், சாம்சங் வழங்கும் அத்தனை வசதிகளும் இதில் இருக்கின்றன. போதாத குறைக்கு அரசாங்கங்களால் எளிதில் ஊடுருவிப் பார்க்கமுடியாத அளவுக்குப் பாதுகாப்பு அம்சங்கள் இதில் இருக்கின்றன என்று ராபர்டோ கூறியிருக்கிறார்.

புதன், 4 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon