மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 15 ஜூலை 2020

புகைப்பிடிக்காதவர்களுக்கு சம்பளத்துடன் கூடுதல் விடுமுறை!

புகைப்பிடிக்காதவர்களுக்கு சம்பளத்துடன் கூடுதல் விடுமுறை!

உலகில் இளைஞர்கள் மத்தியில் புகைப்பிடிப்பது என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புகை பிடிப்பதற்கு ஸ்டைல், வொர்க் டென்சன் என பல காரணங்களை அடுக்குகின்றனர். இந்நிலையில் புகைப்பிடிப்பதை தடுக்கும் விதமாக, டோக்கியோ நிறுவனம் ஒன்று புகைப்பிடிக்காத ஊழியர்களுக்குச் சம்பளத்துடன் 6 நாட்கள் கூடுதல் விடுமுறை அளித்துள்ளது.

ஜப்பான் டோக்கியோவைச் சேர்ந்த, சந்தைப்படுத்தல் நிறுவனமான Piala Inc இந்த ஆஃபரை தனது ஊழியர்களுக்கு வழங்கியுள்ளது. புகைப்பிடிக்கும் ஊழியர்களால் நிறுவனத்தின் உற்பத்தி பாதிக்கப்படுவதாக வந்த புகாரைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம், டோக்கியோவில் உள்ள ஒரு கட்டிடத்தின் 29ஆவது மாடியில் அமைந்துள்ளது. இங்கு பணியாற்றும் ஊழியர்கள் புகைப்பிடிக்க தரைத் தளத்திற்கு சென்று வருவதாகவும், இதனால் 15 நிமிடங்கள் வீணாவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 15 நிமிட இடைவெளியில் புகைப்பிடிக்காதவர்கள் தங்களது வேலையைத் தொடர்ந்து செய்கின்றனர். இது புகைப்பிடிக்காத ஊழியர்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்து அவர்கள் நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து நிறுவனத்தின் சிஇஒ தகாவோ அசுகா, புகைப்பிடிக்காத ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க திட்டமிட்டுள்ளார்.

இதுகுறித்து , Piala Inc செய்தித்தொடர்பாளர் உள்ளூர் ஊடகங்களிடம் கூறுகையில், ஊழியர்களின் குறைகளைக் கேட்டறிய வைக்கப்பட்டிருந்த சஜ்ஜக்ஷன் பாக்ஸில், புகைப்பிடிக்காத ஊழியர்கள் தங்களின் அதிருப்தியைக் கடிதம் மூலம் தெரிவித்திருந்தனர். இது சிஇஓ கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. எனவே புகைப்பிடிக்காதவர்களுக்கு இழப்பீடாக ஒரு ஆண்டுக்குக் கூடுதலாக 6 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை அளிக்கத் திட்டமிடப்பட்டது. அபராதம் மற்றும் வற்புறுத்தல்களால் யாரையும் புகைப்பிடிப்பதை விட்டுவிடச் செய்ய முடியாது. இதுபோன்று ஊக்கமளிப்பதன் மூலம் புகைப்பழக்கத்தை நிறுத்த முடியும் என்று தெரிவித்துள்ளார்.

புதன், 4 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon