மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 8 ஜூலை 2020

மேட்டுப்பாளையம் வழக்குப் பிரிவில் மாற்றம்!

மேட்டுப்பாளையம் வழக்குப் பிரிவில் மாற்றம்!

மேட்டுப்பாளையத்தில் 17 பேர் பலியான வழக்கில், கைதானவர் மீதான வழக்குப்பிரிவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை அருகே நடூர் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் காலனி பகுதியில் வீடுகள் இடிந்து டிசம்பர் 2ஆம் தேதி பெண்கள், குழந்தைகள் என 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வீடுகளுக்கு அருகே கட்டப்பட்டிருந்த கருங்கல்லால் ஆன சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தே விபத்து ஏற்பட்டதால் அந்த வீட்டின் உரிமையாளரைக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

20 அடி உயரம், 80 அடி நீளம் கொண்ட அந்த சுற்றுச்சுவர் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்று அப்பகுதி மக்கள் பலமுறை தெரிவித்தும் அந்த வீட்டின் உரிமையாளர் சிவசுப்பிரமணியனும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அலட்சியமாக இருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது.இந்நிலையில் நேற்று, சிவசுப்பிரமணியனை போலீசார் கைது செய்துள்ளனர். சிக்கதாசம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கிராம நிா்வாக அலுவலா் கார்த்திகேயன் (51) மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் கடந்த 2ஆம் தேதி அளித்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர்.

மாதேஸ்வரன் மலைக்கோயில் அருகே பதுங்கியிருந்த அவரை பெரியநாயக்கன்பாளையம் டிஎஸ்பி மணி தலைமையிலான தனிப்படை கைது செய்து, மதுக்கரை தாலுகா நீதிமன்றத்தின் நீதித் துறை நடுவா் ரெஹானா முன்பு ஆஜர்படுத்தியது.

அப்போது, சிவசுப்பிரமணியனை டிசம்பர் 17ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அவர் கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே அவர் மீது போடப்பட்ட வழக்கின் பிரிவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மேட்டுப்பாளையம் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏற்கெனவே 304 (எ) அஜாக்கிரதையாக மரணம் விளைவித்தல் என்ற பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் அதனை மாற்றி 304(ii) தெரிந்தே மரணத்தை ஏற்படுத்துதல் என்ற பிரிவு போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன், 4 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon