மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

உதைத்து வாங்கிய விருது: ஆறாவது முறையாக மெஸ்சி சாதனை!

உதைத்து வாங்கிய விருது: ஆறாவது முறையாக மெஸ்சி சாதனை!

சிறந்த கால்பந்து விளையாட்டு வீரருக்கு வழங்கப்படும் ‘பாலன் டி ஓர்’ விருதை ஆறாவது முறையாக வென்று பார்சிலோனா நட்சத்திரம் மெஸ்சி சாதனை புரிந்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ‘பிரான்ஸ் ஃபுட்பால்’ என்ற பத்திரிகை சிறந்த கால்பந்து வீரர்களுக்கான விருதுகளை 1956-ஆம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது. பாலன் டி ஓர் எனப்படும் இந்த விருதுகள் மக்களின் வாக்கெடுப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 2019-ஆம் ஆண்டிற்கான இந்த விருதை மெஸ்சி வென்றுள்ளார். 2009-ஆம் ஆண்டில் முதன்முதலாக இந்த விருதைப் பெற்ற மெஸ்சி தொடர்ந்து 2010, 2011, 2012, 2015 ஆகிய வருடங்களிலும் இந்த விருதைப் பெற்றிருந்தார். தற்போது ஆறாவது முறையாக இந்த சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.

டிசம்பர் 3-ஆம் தேதி பாரீஸில் நடைபெற்ற விழாவில் பார்சிலோனா நட்சத்திரம் லியோனஸ் மெஸ்சிக்கு இந்த விருது வழங்கப்பட்டது. கால்பந்து விளையாட்டில் மெஸ்சி-க்கு எதிரியாக ரொனால்டோ திகழ்ந்து வருகிறார். இருவரும் தங்களுக்கென்று தனித்தனியாக பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளனர். 2009 ஆம் ஆண்டிற்குப் பின்னர் 2018-ஐத் தவிர்த்த அனைத்து வருடங்களிலும் இவர்கள் இருவரும் மாறி மாறி பாலன் டி ஓர் விருதைப் பெற்றுவந்தனர். 2018-ஆம் ஆண்டிற்கான விருதை ரியல் மாட்ரிட்டின் வீரர் லூகா மோட்ரிக் பெற்றிருந்தார்.

நிகழ்ச்சியில் ரொனால்டோ கலந்துகொள்ளவில்லை என்றாலும் மெஸ்சியின் இந்த சாதனைக்கு இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்திருந்தார். மேலும் டேவிட் பெக்காம் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

இந்த வருடத்திற்கான விருது மெஸ்சிக்கு வழங்கப்பட்டுள்ள செய்தி அவரது ரசிகர்களை உற்சாகப் படுத்தியுள்ளது.

புதன், 4 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon