மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

சிலைக் கடத்தல் பிரிவுக்கு புது ஐஜி!

சிலைக் கடத்தல் பிரிவுக்கு புது ஐஜி!

சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு புதிய ஐஜியாக டி.எஸ்.அன்புவை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக ஓய்வுபெற்ற ஐஜி பொன்.மாணிக்கவேலை 2018ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் நியமித்தது. இவரது பணி காலம் கடந்த நவம்பர் 30ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து அவரை பதவியிலிருந்து விடுவித்து அரசாணை வெளியிட்ட தமிழக அரசு, சிலைக் கடத்தல் வழக்குகள் தொடர்பான கோப்புகளை, ஆவணங்களை ஒப்படைக்க உத்தரவிட்டது. ஆனால், “நீதிமன்றம் மூலம் நியமிக்கப்பட்ட நான், நீதிமன்ற உத்தரவில்லாமல் ஆவணங்களை ஒப்படைக்க முடியாது” என பொன்.மாணிக்கவேல் தெரிவித்தார்.

இதனிடையே சிலைக் கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்கள், கோப்புகள் ஆகியவற்றை உடனடியாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பொன்.மாணிக்கவேலுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் சென்னை மாநகரக் காவல் துறை நிர்வாகப் பிரிவு ஐஜியாக இருந்த டி.எஸ்.அன்புவை, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக நியமித்து உள் துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் நேற்று (டிசம்பர் 3) அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுவரை பொன்.மாணிக்கவேலின் கீழ் செயல்பட்டுவந்த அதிகாரிகள், இனி அன்புவின் கீழ் செயல்படுவர்.

பணி காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார் பொன்.மாணிக்கவேல். இந்த மனு வரும் டிசம்பர் 6ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. அதற்குள் புதிய அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

புதன், 4 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon