மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 பிப் 2020

அதிமுகவுக்கு வினாச காலம்: குருமூர்த்தி எச்சரிக்கை!

அதிமுகவுக்கு வினாச காலம்: குருமூர்த்தி எச்சரிக்கை!

அதிமுகவுக்கு போதாத காலம் என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி எச்சரிக்கை விட்டிருக்கிறார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அதிமுகவினரை ஆம்பிளைங்களா? என்று வெளிப்படையாக கேட்டு சர்ச்சையைப் பற்ற வைத்தார் துக்ளக் இதழின் ஆசிரியரும், பாஜகவுக்கு நெருக்கமான பிரமுகருமான ஆடிட்டர் குருமூர்த்தி.

அவரது இந்தப் பேச்சுக்கு ஓ.பன்னீரோ, எடப்பாடி பழனிசாமியோ இதுவரை எந்த பதிலும் தெரிவிக்காத நிலையில் அமைச்சர் ஜெயக்குமார், “ குருமூர்த்தியின் பேச்சு ஆணவம், திமிர்வாதத்தின் உச்சம், இவ்வளவு திமிர் கூடாது; பொதுவாக நாவடக்கம் தேவை. அதிமுகவின் மீது கைவைத்து வாங்கிக் கட்டிக் கொண்ட வரலாறும் குருமூர்த்திக்கு உண்டு. அது அனைவருக்கும் தெரியும்” என்று கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடான நமது அம்மாவில், சோ போல தன்னை குருமூர்த்தி நினைத்துக் கொள்ளக் கூடாது என்றும் அவர் நான்காம் தரத்தில் பேசினால் அவரை எதிர்த்து நாற்பதாம் தரத்தில் பேச அதிமுகவில் ஆள் பஞ்சம் கிடையாது என்றும் கடுமையாக கண்டித்திருந்தது.

இந்நிலையில் நேற்று (டிசம்பர் 3) வெளியான துக்ளக் இதழின் தலையங்கத்தில், ‘மிரட்டல் பலிக்காது’ என்ற தலைப்பில் இந்த விவகாரம் பற்றி எழுதப்பட்டிருக்கிறது.

“அதிமுகவின் அதிகாரபூர்வ பத்திரிகையில் நம்மை மிரட்டியிருக்கிறார்கள். மிரளுகிறவர்களைத்தான் மிரட்ட முடியும். சர்வாதிகாரியான இந்திரா காந்தி, கருணாநிதி தலைமையிலான திமுக, ஜெயலலிதா தலைமையிலான அதிமுக, நாடே அஞ்சிய பயங்கரவாத எல்.டி.டி.இ. கூட துக்ளக்கை மிரட்டவோ, பயமுறுத்தவோ முடியவில்லை. அதிமுகவினர் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.

பிளந்திருந்த அதிமுக ஒன்றுபட உதவிய இன்றைய துக்ளக் ஆசிரியருக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் நன்றி கூறினர். இதையும் கூட நாம் கூற நேர்ந்ததற்குக் காரணம் இப்போது, ‘துக்ளக்கிற்கும், அதிமுக இணைப்புக்கும் சம்பந்தம் இல்லை என்று பேசத் தொடங்கியிருப்பதால்தான். இவற்றை எல்லாம் நினைவில் கொண்டு வினாசகாலே விபரீத புத்தி என்று ஆகாமல் அதிமுக தலைவர்கள் நடந்துகொள்வது நல்லது” என்று குறிப்பிட்டுள்ளார் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி.

இதுபற்றி அதிமுக வட்டாரத்தில் பேசியபோது, “ஆடிட்டர் குருமூர்த்தி டெல்லி பாஜகவில் ஏதோ சில பிடிமானம் இருக்கும் தைரியத்தில்தான் இப்படி பேசி வருகிறார். ஆனால் எதிர்ப்பு வந்தவுடன் ஆடிட்டர் குருமூர்த்தி தன் மீது துக்ளக் என்ற போர்வையை எடுத்துப் போர்த்திக்கொண்டு எடிட்டர் குருமூர்த்தி ஆகிவிடுகிறார். இதிலிருந்தே அவர் பயந்துவிட்டார் என்பது தெரிகிறது” என்கிறார்கள்.

புதன், 4 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon