மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

கிச்சன் கீர்த்தனா: மங்களூர் மொச்சை கிரேவி

கிச்சன் கீர்த்தனா: மங்களூர் மொச்சை கிரேவி

அந்தந்த காலநிலைக்கு, அந்தந்த இடங்களில் விளையும் உணவுப் பொருட்களைப் பயன்படுத்துவது நம் உடலை உறுதி செய்யும். குளிர்காலத்தில் அதிகம் கிடைக்கக் கூடியது மொச்சை. நமது உடலுக்குத் தேவையான புரதம், நார்ச்சத்துகள், மினரல்ஸ் போன்றவற்றை அதிகமாகக்கொண்டிருக்கிறது மொச்சை. சோம்பி கிடக்கும் உடலைச் சுறுசுறுப்பாக்கும் இந்த மொச்சை கிரேவி, கர்நாடகா ஸ்பெஷல்.

என்ன தேவை?

மொச்சை - ஒரு கப்

சின்ன வெங்காயம் - 15

பெரிய வெங்காயம் - ஒன்று

தேங்காய்த் துருவல் - கால் கப்

கசகசா - ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

வறுத்து அரைக்க:

முழு மல்லி (தனியா), சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 6

மிளகு - கால் டீஸ்பூன்

தேங்காய்த் துருவல் - ஒரு டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

வறுத்து அரைக்க வேண்டியதை விழுதாக அரைத்துக்கொள்ளவும். தேவையானவற்றில் கொடுத்துள்ள தேங்காய்த் துருவல் மற்றும் கசகசாவை மிக்ஸியில் அரைத்து தனியே வைக்கவும். பெரிய வெங்காயத்தைத் தோலுடன் தணலில் காட்டி, தோல் கருகும் வரை சுட்டெடுக்கவும். பிறகு, தோலை நீக்கிவிட்டு மிக்ஸியில் சேர்த்து மையாக அரைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு சூடாக்கி நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலைச் சேர்த்துத் தாளிக்கவும். இத்துடன் வறுத்து அரைத்த விழுது, வெங்காய விழுது, மொச்சை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு, தேவையான உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். கலவை ஒரு கொதி வந்ததும் மூடி, இரண்டு விசில் வரும் வரை வேகவிட்டு இறக்கவும். பிரஷர் நீங்கியதும் மூடியைத் திறந்து அரைத்த தேங்காய்-கசகசா விழுதைச் சேர்த்துக் கிளறி கொதி வந்ததும் இறக்கவும்.

நேற்றைய ரெசிப்பி: மருந்துக்குழம்பு

புதன், 4 டிச 2019

chevronLeft iconமுந்தையது