மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 31 மே 2020

கடலூர்-செயல்படாத இணையதளம், ஆப்: அவதியில் பொதுமக்கள்!

கடலூர்-செயல்படாத இணையதளம், ஆப்: அவதியில் பொதுமக்கள்!

கடலூர் மாவட்டத்தில் அரசு இணையதளம், ஹலோ கடலூர் ஆப் ஆகியவை முறையான பயன்பாட்டில் இல்லை என்று குற்றம்சாட்டுகின்றனர் பொதுமக்கள்.

பெருமழை, புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் அதிகாரிகளை பொதுமக்கள் தொடர்புகொள்வதில் சிரமம் ஏற்படும். இதனால் அதிகாரிகளை எளிமையாக தொடர்புகொள்ளும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஆப் ஒன்று உருவாக்கப்பட்டது. அதுபோலவே கடலூருக்கென பிரத்யேகமாக ஹலோ கடலூர் என்று ஆப் தொடங்கப்பட்டது. அதில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து துறை அதிகாரிகளின் பெயரும், அவர்களது எண்ணும் இடம்பெற்றிருக்கும். ஆனால், இந்த ஆப் மூலமாகவும் அதிகாரிகளை தொடர்புகொள்ள முடியவில்லை என்று குற்றம்சாட்டுகிறார்கள் பொதுமக்கள்.

இதுபோலவே மாவட்ட அரசு இணையதளத்திலும் ஏகப்பட்ட குளறுபடிகள் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். கடலூர் மாவட்ட எஸ்.பியாக அபினவ் நியமிக்கப்பட்டு ஆறு மாதங்கள் ஆகிவிட்டபோதிலும், கடலூர் இணையதளத்தில் இன்னும் பழைய எஸ்.பி சரவணன் பெயர்தான் உள்ளது. 2019 தேர்தல் முடிந்து கடலூர் எம்.பி.யாக ரமேஷும், சிதம்பரம் எம்.பி.யாக திருமாவளவனும் தேர்வு பெற்றனர். அவர்களின் பெயரைக் கூட நீண்ட நாட்களாக இணையதளத்தில் பதிவேற்றவில்லை. இதுகுறித்து எம்.பி.க்கள் தரப்பிலிருந்து மாவட்ட நிர்வாகத்திடம் பேசியிருக்கிறார்கள். அதற்கு பிறகுதான் அவர்களின் பெயர் இணையத்தில் பதிவேற்றப்பட்டிருக்கிறது. ஆனால், இதுவரை அவர்களது தொடர்பு எண் குறிப்பிடப்படவில்லை.

அரசு இணையதளம் மற்றும் ஹலோ கடலூர் ஆப்பில் ஏற்பட்ட குழப்பங்கள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகளை தொடர்புகொண்டு பேசினோம். அவர்களோ, இதற்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்றும் முழுப் பொறுப்பும் ஆட்சியரிடம்தான் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

“இணையதளம் தொடர்பாக விஷயங்களுக்கு நாங்கள் பொறுப்பு அல்ல. அதற்கான முழு அதிகாரமும் ஆட்சியர் கையில்தான் உள்ளது. நீங்கள் சொல்லும் ஹலோ கடலூர் ஆப் கடந்த முறை புயல் வந்தபோது மிகவும் உதவிகரமாக இருந்தது. ஏனெனில், ஆட்சியர் முதல் அதிகாரிகள் வரை அனைவரது எண்களும் அதில் இருந்தது. அதனை பயன்படுத்தி எந்தெந்த இடத்தில் என்னென்ன பிரச்சினை உள்ளது என்பதை பொதுமக்கள் தெரிவித்ததால், உடனடியாக அவை சரிசெய்யப்பட்டன. அதன்பிறகு அந்த ஆப் அப்டேட் செய்யப்படவில்லை ” என்று தெரிவித்தனர்.

ஆப் சரிவர செயல்படாததால் தற்போது மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அதிகாரிகளை தொடர்புகொள்ள முடியாத நிலைதான் உள்ளது.

கடலூர் ஆப்பை உருவாக்கிய கார்த்திகேயனை தொடர்புகொண்டு பேசினால், அவர் மாவட்ட நிர்வாகம் தன்னை அழைக்கவேயில்லை என்று கூறுகிறார். “என் மீது எந்தத் தவறும் இல்லை. ஆப்பை அப்டேட் செய்வது சம்பந்தமாக நான் மாவட்ட நிர்வாகத்தை தொடர்புகொண்டு பேசினேன். ஆனால், நீங்கள் தனியாராக இருக்கிறீர்கள். உங்களுக்கு முன்னுரிமை அளிக்க முடியாது என தெரிவித்துவிட்டனர். நிலைமை இப்படி இருக்க என்னால் என்ன செய்ய முடியும். அதே சமயம் வேளாண்மை உள்ளிட்ட அரசின் மற்ற துறைகளில் எங்களை பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். ‘மை சேலம்’ ஆப்பை கூட நான்தான் அப்டேட் செய்து தந்தேன். இதுபோன்ற ஆப்களை முறையாக பயன்பாட்டுக்கு கொண்டுவந்தால் பொதுமக்கள் மட்டுமல்லாமல் அதிகாரிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

இனியாவது இணையதளமும், கடலூர் ஆப்பும் முறையாக செயல்படுகிறதா என்று பார்ப்போம்.

செவ்வாய், 3 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon