மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 27 பிப் 2020

தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி பயிற்சியா?

தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி பயிற்சியா?

தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி பயிற்சியளிக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக அரசுக்கு திமுக வலியுறுத்தியுள்ளது.

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதுகலை எம்.ஃபில் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஒரு வருடத்திற்கான இந்தி மற்றும் பிரெஞ்ச் மொழி பயிற்சியை தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் பாண்டியராஜன் நேற்று (டிசம்பர் 2) துவக்கி வைத்தார். தொடர்ந்து, அதற்காக ஆறு லட்ச ரூபாயினை தமிழக அரசு ஒதுக்கீடு செய்திருப்பதாக அறிவித்த மாஃபா பாண்டியராஜன், “தமிழில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் இந்தி மொழியைக் கற்றுக் கொண்டால் வேலை வாய்ப்பு உருவாகும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதுதொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (டிசம்பர் 3) வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி ஆட்சியில் தமிழ் வளர்ச்சித்துறை என்பது தமிழ் அழிப்புத் துறையாகவே தற்போது மாறிவிட்டிருக்கும் அவலம் நேர்ந்து கொண்டிருக்கின்றது. மெல்லத் தமிழ் இனிச் சாகுமோ என தமிழ்ச் சான்றோர்களும், அறிஞர்களும், ஆர்வலர்களும் நெஞ்சம் பதறும் வண்ணம் தமிழ்வளர்ச்சித் துறையின் அண்மைக்கால செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் முக்கிய நோக்கம் தமிழைத் தாய் மொழியாகக் கொள்ளாத பிற இந்திய மொழியினருக்கும் பிற நாட்டினருக்கும் தமிழைக் கற்பித்தல் என்பதே ஆகும் எனச் சுட்டிக்காட்டியுள்ள தங்கம் தென்னரசு, “ஆனால் இந்த முக்கிய நோக்கங்களை அடியோடு சிதைத்துவிட்டு தமிழாராய்ச்சியில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு இந்தி பிரச்சார சபாவோடு இணைந்து உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் இந்தி கற்றுக் கொடுக்க முயல்வது ஏற்கனவே கொல்லைப் புறமாகவேனும் நுழையக் காத்திருக்கும் இந்தி மொழி ஆதிக்கத்திற்கு பட்டுக்கம்பளம் விரிப்பது மட்டுமல்ல கடைந்தெடுத்தத் துரோகச் செயலுமாகும்” என்று கடுமையாக சாடியுள்ளார்.

தமிழ்ப்பண்பாட்டைச் சிதைத்துப் பாரதப் பண்பாடு எனப் பறைசாற்றித் திரியும் வேளையில் எரியும் நெருப்பில் எண்ணெய் விடுவது போல இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது தமிழ் உணர்வைக் கொச்சைப்படுத்தி புறந்தள்ளும் செயலன்றி வேறென்ன? என்று கேள்வி எழுப்பியிருக்கும் அவர், “மொழிப் பிரச்சனையில் தமிழகம் ஒரு கந்தக பூமி என்பதை மறந்து தமிழக மக்களின் உணர்வுகளோடு மீண்டும் சீண்டி விளையாடத் துவங்கியிருக்கும் தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்களுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவிக்கிறேன். உடனடியாக இந்த அறிவிப்பினை திரும்பப் பெற வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

செவ்வாய், 3 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon