மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 28 நவ 2020

விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த மதுரைப் பொறியாளர்!

விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த மதுரைப் பொறியாளர்!

நிலவில் நொறுங்கி விழுந்த விக்ரம் லேண்டரை மதுரையைச் சேர்ந்த பொறியாளர் உதவியுடன் நாசா கண்டுபிடித்துள்ளது.

செப்டம்பர் 7ஆம் தேதி நிலாவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் - 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் மென்மையான தரையிறக்கத்தின் போது, 2.1 கிலோமீட்டர் தொலைவில் புவியுடனான தொலைத்தொடர்பை இழந்தது. வெறும் 14 நாட்கள் மட்டுமே ஆயுட்காலம் கொண்ட லேண்டரை தொடர்புகொள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டர் தரையிறங்கியதா இல்லையா என்பது குறித்து அறிந்து கொள்ள இந்தியாவுக்கு நாசா உதவுவதாக அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் நிலவின் மேற்பரப்பில் இருப்பது கண்டறியப்பட்டதாக நாசா தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் நிலவில் நொறுங்கி விழுந்த விக்ரம் லேண்டரை கண்டறிய நாசாவுக்கு மதுரை பொறியாளர் சண்முக சுப்பிரமணியன் உதவி செய்தது தெரியவந்துள்ளது.

செப்டம்பர் 17, அக்டோபர் 14,15, நவம்பர் 1 ஆகிய தேதிகளில் நாசா வெளியிட்ட புகைப்படங்களை ஆய்வுசெய்த சண்முக சுப்பிரமணியன் விக்ரம் லேண்டரின் பாகங்களை கண்டுபிடித்துள்ளார். தான் கண்டுபிடித்தவற்றை நாசாவுக்கு அவர் மெயில் மூலம் அனுப்பியுள்ளார். சுப்பிரமணியனின் ஆய்வை அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகளும் உறுதி செய்தனர். விக்ரம் லேண்டரின் பாகத்தை கண்டறிய உதவிய சண்முக சுப்பிரமணியனுக்கு நாசா நன்றியும், பாராட்டும் தெரிவித்தது.

இதுதொடர்பாக பேசிய பொறியாளர் சண்முக சுப்பிரமணியன், “நாசாவின் பழைய மற்றும் புதிய புகைப்படங்களை வைத்து ஆய்வு செய்தேன். அதில், ஒரே ஒரு சிறிய புள்ளியைத் தவிர வேறு மாற்றங்கள் தெரியவில்லை. எனவே, அதுதான் விக்ரம் லேண்டரின் பாகங்களாக இருக்கும் எனக் கருதி நாசாவுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். என்னுடைய தகவலை வைத்து ஆராய்ச்சி செய்தபோது, நாசாவினால் எளிதாக விக்ரம் லேண்டரின் பாகங்களை கண்டறிய முடிந்தது” என்று தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 3 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon