மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 27 மே 2020

மீண்டும் கேமரா முன்பு பாவனா

மீண்டும் கேமரா முன்பு பாவனா

2018 ஆம் ஆண்டு ஜனவரியின் தொடக்கத்தில் திருமணத்தை முடித்துக்கொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டவர் நடிகை பாவனா. திருமணமானதால் திரைப்படங்களில் நடிக்கவேண்டாம் என்று சொல்லுமளவுக்கு பிற்போக்குத்தனமானவர் என் கணவர் இல்லை என்று பாவனாவே கூறியிருந்தாலும், திரையுலகிலிருந்து அவர் விலகியே இருந்தார். இந்த சினிமா கொடுத்த கசப்பான அனுபவங்களும், துயர வேளையில் அவருக்கு ஆறுதலாகவும், ஆதரவாகவும் அருகில் நிற்காத சினிமாவிலிருந்து பாவனா விலகியே இருந்தார். ஆனால், அந்தக்காலம் முடிந்துவிட்டது.

‘நட்புக்காக வந்தார். இது பெரிய விஷயமா?’ என்று சிலர் பேசினாலும், அவர் இன்று வந்ததே எவ்வளவு பெரிய விஷயம் என்று அவரது ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர். ஒரு நிமிட வீடியோ ஒன்று. பேக்-கிரவுண்டில் ஒலிக்கும் இசையையும், அதன்பின்னே ஒலிக்கும் பாடலையும் தலையை ஆட்டி ரசித்துக்கொண்டே இருக்கும் பாவனா, கடைசியாக தனது தோழிக்கு நன்றி கூறுகிறார். அந்தத் தோழி வேறு யாரும் அல்ல. பாவனாவுக்குத் தேவையான அனைத்து சமயங்களிலும் அவருக்கு பக்கத்தில் நின்ற ரம்யா நம்பீசன். இந்த நட்பு தான் சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்கியிருந்த பாவனாவை இப்போது மீண்டும் கேமராவுக்கு முன்பாக கொண்டுவந்திருக்கிறது.

ரம்யா நம்பீசன் புதிய யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கவிருக்கிறார். கார்ப்பரேட் இசை சேனல்களைப்போல் இல்லாமல், திறமையானவர்களுக்கும், இந்த சமூகத்துக்குத் தேவையான கருத்துள்ள பாடல்களை உருவாக்குபவர்களுக்கும் வாய்ப்பு வழங்க இந்த சேனல் ரம்யா நம்பீசனால் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த சேனலில் முதல் வெளியீடாக ரம்யா நம்பீசனின் ‘Encore' என்கிற பாடல் வெளியாகவிருக்கிறது. இந்தப்பாடலுக்கான தன் கருத்தைத்தான் பாவனா வெளியிட்டிருக்கிறார்.

செவ்வாய், 3 டிச 2019