மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 27 மே 2020

மேட்டுப் பாளையத்தில் அரசின் திருட்டுத் தனம்: ஸ்டாலின்

மேட்டுப் பாளையத்தில் அரசின் திருட்டுத் தனம்: ஸ்டாலின்

மேட்டுப் பாளையம் சுவர் பற்றி ஏற்கனவே புகார்கள் செய்யப்பட்டும், நடவடிக்கை எடுக்கப்படாததால் அரசின் அலட்சியத்தால்தான் பதினேழு உயிர்கள் பலிவாங்கப்பட்டிருப்பதாக திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சிவசுப்பிரமணியம் என்பவரது வீட்டின் சுற்றுச் சுவர் இடிந்துவிழுந்து அதன் அருகே குடியிருந்த ஆதி திராவிடர் காலனியைச் சேர்ந்த 17 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். தமிழகம் முழுதும் அதிர்வை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக மு.க.ஸ்டாலின் இன்று ( டிசம்பர் 3) மேட்டுப் பாளையம் சென்றார். நீலகிரி எம்.பி.யான ஆ.ராசா, மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் சென்று பாதிக்கப்பட்டவர்களின் முன்னால் நின்று அவர்கள் சொல்வதை பொறுமையாகக் கேட்டார் ஸ்டாலின்.

“எங்களுக்காக போராடினவங்களை கன்னாபின்னானு போலீஸ் அடிச்சு விரட்டுது சார். நாங்க என்ன பாவம் பண்ணோம் சார்? இந்த சுவரு கட்டும்போதே பேஸ்மட்டம் போட்டுக் கட்டலைங்க. அப்பவே நாங்க வேணாம் வேணாம்னு அடிச்சுக்கிட்டோம். இன்னிக்கு வீட்டுக்கு ரெண்டு பேரு, மூணு பேருனு பலிகொடுத்துட்டு நிக்கிறோம். 16 பேர் உடல்களை அவசர அவசரமா நைட் 12.30 மணிக்கு கொண்டு போயி எரிச்சிருக்காங்க சார் ” என்று ஸ்டாலினிடம் குமுறலைக் கொட்டினார் ஒரு இளைஞர்.

இன்னொரு பெண் ஸ்டாலினிடம், “ நாங்க பலவாட்டி அதிகாரிகள்ட்ட சொல்லிட்டோம், கலெக்டர்கிட்ட சொல்லிட்டோம். ஆனா எந்த நடவடிக்கையும் இல்லைங்க. என் வீட்ல மூணு பேரு செத்துட்டாங்க சார்” என்று சொல்லும்போது ஸ்டாலினின் கண்களில் நீர் அரும்பியது.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், “ நான் திமுக தலைவராக மட்டுமில்லை... தமிழக எதிர்க்கட்சித் தலைவராகவும் இங்கே வந்திருக்கிறேன். ஏற்கனவே அந்த சுவர் பழுதடைந்திருக்கிறது. எந்த நேரத்திலும் இடிந்து விழும் என்று இந்த பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகளுக்கு, மாவட்ட கலெக்டருக்கு, அமைச்சருக்கு தொடர்ந்து புகார் கொடுத்திருக்கிறார்கள் . உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும். ஆனால் அரசின் அதிகாரிகளின் அமைச்சரின் அலட்சியத்தால் சுவர் விழுந்து 17 பேர் இறந்து விட்டார்கள்.இறந்தவர்களின் உடலை யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் திருட்டுத் தனமாக பிரேதப் பரிசோதனை செய்து முடித்துள்ளனர்.

இந்த மக்களுக்காக போராடியவர்கள் கண்மூடித் தனமாகத் தாக்கப்பட்டு சிலர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். கண்மூடித் தனமாகத் தாக்கிய போலீஸ் அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அறிவித்திருக்கும் நிவாரணம் போதாது. அவர்களுக்கு உரிய வீடு கட்டித் தரப்படவேண்டும்.

இந்த விபத்துக்குக் காரணமானவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை. ஏதோ கண் துடைப்புக்கான வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. விசாரணை நடத்தி உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்” என்று வற்புறுத்தினார் ஸ்டாலின். இது தொடர்பாக கலெக்டரிடமும் பேசியிருக்கிறார் ஸ்டாலின்.

செவ்வாய், 3 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon