மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 21 செப் 2020

ஆவணங்களை ஒப்படைக்க பொன். மாணிக்கவேலுக்கு உத்தரவு!

ஆவணங்களை ஒப்படைக்க பொன். மாணிக்கவேலுக்கு உத்தரவு!

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல், வழக்கு தொடர்பான ஆவணங்களை ஏடிஜிபியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று (டிசம்பர் 2) உத்தரவிட்டுள்ளது.

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக ஓய்வுபெற்ற ஐஜி பொன்.மாணிக்கவேலை 2018இல் சென்னை உயர் நீதிமன்றம் நியமித்தது. இவரது பணி காலம் கடந்த நவம்பர் 30ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. பணி காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார் பொன்.மாணிக்கவேல். இந்த மனு வரும் டிசம்பர் 6ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. இந்த நிலையில், சிலைக் கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்கள், கோப்புகள் ஆகியவற்றை உடனடியாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நவம்பர் 30ஆம் தேதி தமிழக அரசு பொன்.மாணிக்கவேலுக்கு உத்தரவிட்டது.

பொன்.மாணிக்கவேலின் பணி நீட்டிப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்திலும் தமிழக அரசு சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், பொன்.மாணிக்கவேல் இனியும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரியாகத் தொடரக் கூடாது. பொன்.மாணிக்கவேலுக்குப் பதிலாக வேறு ஒரு அதிகாரியை நியமிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொன்.மாணிக்கவேலின் பணியை நீட்டிக்க எதிர்ப்புத் தெரிவித்து தமிழக அரசு தொடர்ந்த மனு மீது பொன்.மாணிக்கவேல், டிராபிக் ராமசாமி ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டிய அவசியம் என்ன என்றும் பொன்.மாணிக்கவேலுக்குக் கேள்வி எழுப்பியுள்ளது.

பொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்பு குறித்து டிராபிக் ராமசாமி தொடர்ந்த மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசுக்கு எதிராகத் தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்துள்ளது.

அப்போது, பொன்.மாணிக்கவேல் சார்பில், சிலைகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற அக்கறை தமிழக அரசுக்கு இல்லை. சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அக்கறை இருந்ததால் தன்னை நியமித்து செயல்பாடுகளைக் கண்காணித்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சிலைக் கடத்தல் தொடர்பான ஆவணங்களை, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி வசம் ஒப்படைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செவ்வாய், 3 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon