மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 4 ஆக 2020

விமானம் ஏறினால் புதிய பாஜக தலைவரா? நயினாருக்கு எதிராக திட்டம்!

விமானம் ஏறினால் புதிய  பாஜக தலைவரா?  நயினாருக்கு எதிராக திட்டம்!

தமிழக பாஜக தலைவர் பதவி செப்டம்பர் 1 ஆம் தேதியில் இருந்து காலியாகவே இருக்கிறது. மூன்று மாத காலமாக தலைவர் பதவி நியமிக்கப்படாத நிலையில், புதிய பாஜக தலைவர் பதவி கட்சித் தேர்தலின்படி நடத்தப்படும் என்று நிர்வாகிகள் சொல்லிவருகின்றனர்.

இந்நிலையில் வாராவாரம் இவர்தான் புதிய தலைவர், அவர்தான் புதிய தலைவர் என்று பாஜகவை மையமாக வைத்து ஊடகங்களில் செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. இதுபோல இன்று டிசம்பர் 3 ஆம் தேதி தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட இருக்கிறார் என்று ஊடகங்களிலும் சமூக தளங்களிலும் செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன.

இதுபற்றி கமலாலய வட்டாரங்களில் விசாரித்தோம்.

“நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக தலைவர் பதவிக்காக பேசப்படும் நபர்களில் ஒருவர் என்பது உண்மைதான். ஆனால் இன்று அவர் தன் தனிப்பட்ட வேலைகளுக்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்குப் புறப்பட்டிருக்கிறார். உடனே பாஜகவுக்குள்ளேயே இருக்கும் நயினாரின் எதிர்கோஷ்டிகள் தங்களின் ஆதரவாளர்களிடம் சொல்லி, ‘நயினார் பாஜக தலைவராகப் போகிறார். டெல்லி பயணம்’ என்று சமூக தளங்களில் பதிவிடச் சொல்லியிருக்கிறார்கள். இதை அடிப்படையாக வைத்து ஊடகங்களும் நயினார் பெயரை திரும்பத் திரும்ப இன்று சொல்லியிருக்கின்றன. இதைக் கேட்டு நயினார் அதிர்ச்சி அடைந்துவிட்டார்.

ஏனெனில் தமிழக பாஜகவுக்குள் இப்போது ஒரு டிரண்ட் உருவாகியிருக்கிறது. குறிப்பிட்ட ஒருவரை பாஜக தலைவராக நியமிக்கப் போகிறார்கள் என்று செய்தியைக் கிளப்பிவிட்டால், கட்சியின் டெல்லி மேலிடம் அவர்களாகவே சுய விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள் என்று கருதி அவர்களை தலைவர் பதவிக்கான ரேஸிலிருந்தே விலக்கி வைக்கும் மூடில் இருக்கிறது. இதை அறிந்த சிலர் தங்கள் உட்கட்சி எதிரிகளை பழிவாங்குவதற்காகவே இந்த தலைவர் ஆயுதத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

இன்று சமூக தளங்களில் செய்தியைப் பார்த்துவிட்டு நயினாரின் ஆதரவாளர்கள் அவருக்கு போன் போட்டு, ‘அண்ணே... விசேஷமாண்ணே?’ என்று விசாரித்தால், ‘எல்லாம் அந்தாளோட சதியாதான் இருக்கும்’ என்று விளக்கம் சொல்லியிருக்கிறார். இப்போது புரிந்துகொண்டீர்களா தமிழக பாஜகவில் நடக்கும் யுத்தத்தை” என்கிறார்கள்.

முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் டெல்லியில்தான் இருக்கிறார். அதேபோல மேலும் சில தலைவர்களும் டெல்லிக்கு சென்றிருக்கிறார்கள். ஆனால் நயினாரை மட்டும் குறிவைத்து இந்த புயல் கிளப்பப்படுகிறது என்கிறார்கள் நயினார் ஆதரவாளர்கள்.

செவ்வாய், 3 டிச 2019

அடுத்ததுchevronRight icon